விவேக் மரணத்திற்கு வேக்சின் காரணம் இல்லை! தடுப்பூசி எடுத்தபின் சிக்கல் ஏற்படுகிறது?
நடிகர் விவேக் மரணத்திற்கு அவர் எடுத்துக்கொண்ட கொரோனா தடுப்பூசி காரணமில்லை என்று மத்திய சுகாதாரத்துறையின் ஆய்வு குறிப்பிட்டுள்ளது.
சின்னை கலைவாணர் விவேக் மரணத்திற்குப் பின், தடுப்பூசி பற்றிய அச்சம் கொஞ்சம் வலுத்தது. அதன் விளைவுகள் இன்னும் ஓயவில்லை. சிலரிடம் தற்போது கேட்டாலும், விவேக் தடுப்பூசி எடுத்துக்கொண்டதால் தான் இறந்தார் என்று பேசுவதைப் பார்க்க முடியும்.
வாட்ஸாப், பேஸ்புக், டிவிட்டர் என்று அனைத்து இடங்களிலும் இதனை வெளிப்படையாகப் பலரும் இது பற்றி விவாதித்துக் கொண்டிருந்தனர். அதேபோல் யூடியூப் சேனல்கள் பல, விவேக் மரணத்திற்குத் தடுப்பூசி காரணமாக இருக்கலாம் என்று நேரடியாகவே குறிப்பிட்டனர்.
அதிக அளவில், தடுப்பூசி பற்றிய எதிர்மறை கருத்துகள் வெளியானதும், தமிழ்நாடு அரசு விளக்கம் அளித்திருந்தது. ஆனால், அதைக் காதில் வாங்காமலேயே பலரும் அது பற்றித் தொடர்ந்து விவாதித்து வந்தனர். இந்நிலையில், பல மாதங்கள் கழித்து தடுப்பூசியால் நடிகர் விவேக் மரணமடைந்தாரா என்பதைப் பற்றி ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
நடிகர் விவேக்கின் மரணம்!
நடிகர் விவேக் ஏப்ரல் மாதம் 15-ம் தேதி ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில், கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டார். அதன்பின், செய்தியாளர்கள் சந்திப்பில் ஈடுபட்ட விவேக், விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாகப் பேசியிருந்தார்.
16-ம் தேதி விவேக்கிற்கு கடும் மாரடைப்பு ஏற்பட்ட நிலையில், அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். உடனே மருத்துவமனை தரப்பில் தடுப்பூசிக்கும், மாரடைப்பிற்கும் தொடர்பில்லை என்று அறிக்கை வெளியிடப்பட்டது. இந்நிலையில் விவேக் உயிரிழந்தார். அதன்பின்னர் பலதரப்பிலிருந்து தடுப்பூசி பற்றிய விவாதம் அதிகரித்தது.
மத்திய சுகாதாரத்துறை சார்பாகத் தடுப்பூசியினால் ஏற்படும் பாதிப்புகள் பற்றி ஆய்வு செய்யப்பட்டது. அந்த ஆய்வில், நடிகர் விவேக்கின் மரணத்திற்குத் தடுப்பூசி காரணமில்லை என்று முடிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆய்விற்கு 92 பேரின் தடுப்பூசிக்கு பிந்தைய நிலைகளைக் கொண்டு ஆய்வு செய்யப்பட்டுள்ளது. நடிகர் விவேக்கிற்கு உயர் ரத்த அழுத்தம் இருந்த நிலையில், இதயத் துடிப்பு முடக்கம் ஏற்பட்டு உயிரிழப்பு ஏற்பட்டதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆய்வில் எடுத்துக்கொள்ளப்பட்டவர்களில், 92 பேரில் 18 பேருக்குத் தடுப்பூசியின் காரணமாகப் பின்விளைவுகள் ஏற்பட்டுள்ளன. அதில் ஒருவர் மரணமடைந்துள்ளார். தடுப்பூசியால் இவர்களுக்கு இந்த பின்விளைவுகள் ஏற்பட முக்கிய காரணம் ஒவ்வாமை. ஒவ்வாமையால் அதி தீவிரமான பாதிப்பு ஏற்பட்டு நோயாளிகள் அபாய கட்டத்திற்குச் செல்கின்றனர்.
57 பேருக்குத் தடுப்பூசியால் பின்விளைவுகள் ஏற்படும் என்று சொல்லப்பட்டாலும், உடல்நலப் பிரச்சனைகளுக்கும் தடுப்பூசிக்கும் தொடர்பில்லை என்று கண்டறியப்பட்டுள்ளது. இந்த 57 பேரில் 25 பேர் இறந்துவிட்டனர். தடுப்பூசி போட்ட பிறகு இவர்களுக்குப் பிரச்சனை ஏற்பட்டாலும், தடுப்பூசிக்கும் அந்தப் பிரச்சனைகளுக்கும் தொடர்பு ஏதுவும் இல்லை.
கொரோனா தடுப்பூசியில் வீரியம் அதிகம் என்பது பற்றி மருத்துவர் சாமிநாதன் கூறுகையில், “எந்த தடுப்பூசியும் வீரியம் அதிகம், வீரியம் இல்லை என்று கூற முடியாது. எந்த ஒரு தடுப்பூசியையும் வைரசின் குணத்தை மாற்றி, அதை நம் உடலில் செலுத்துவர். சாதாரணமாக வைரசையோ, பாக்டீரியாவையோ கொன்று அதைத்தான் தடுப்பூசியாக உடலில் செலுத்துவர். உடலுக்கும் இறந்த பாக்டீரியாவா, உயிரோடு இருக்கும் பாக்டீரியாவா என்பது தெரியாது. எதோ ஒரு பாக்டீரியா உள்ளே வந்திருக்கிறது என்று அதற்கு ஆன்டிபாடியை உடல் தயாரிக்கும். இது தான் ஒரு தடுப்பூசியின் அடிப்படை வேலை.
சில நோயாளிகளுக்கு உடலில் இரத்தம் உறைதல் ஏற்படுமா? என்றால், இதற்கும் மிக மிகக் குறைவான சாத்திய கூறே உள்ளது. 15 லட்சம் பேருக்குத் தடுப்பூசி செலுத்தும் போது 4 பேருக்குப் பிரச்சனை ஏற்படுவதாகக் கூறுகின்றனர். ஏற்கனவே இதய பிரச்சனை, நுரையீரல் பிரச்சனை இருப்பவர்களுக்கு அதிக அளவில் பாதிப்பை ஏற்படுத்தும்” என்று குறிப்பிடுகிறார்.
கொரோனா தடுப்பூசி எடுத்துக்கொண்ட 70 வயதைக் கடந்த பெண்மணி ஒருவர் கூறுகையில், “எனக்குத் தடுப்பூசி எடுத்துக்கொண்ட பின், கால்வலி அதிகரித்தது. சில நாட்கள் எழுந்து நடக்கக் கூட சிரமாகவிட்டது. தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றபின்னரே தற்போது சரியாகி வருகிறது” என்று குறிப்பிட்டார்.
மருத்துவரிடம் பரிசோதித்தபோது, அவருக்குத் தடுப்பூசியால்தான் பிரச்சனை ஏற்பட்டதாக உறுதிப்படுத்தவில்லை. தடுப்பூசி எடுத்துக்கொண்ட பின், வயதான சிலருக்கு உடல் சார்ந்த பிரச்சனைகள் பல இருப்பதாகக் கூறி வருகின்றனர். எனவே அவர்கள் தரப்பில், தடுப்பூசி பற்றிய வதந்திகளும் இன்னும் ஓயவில்லை. இதுபோன்ற பிரச்சனைகள் பற்றிச் சரியான ஆய்வு மேற்கொண்டால் மட்டுமே முறையான தீர்வை கண்டறிய முடியும்.
