'யாரு தம்பி, உங்கள நிக்க வைச்சிருக்காங்க'| வேறுபட்ட மூன்று சுயேச்சை வேட்பாளர்களின் பகிர்வு
எந்த கட்சியையும் பிடிக்கவில்லை என்றால், நோட்டாவுக்காவது ஓட்டுப் போட்டிருக்க வேண்டும். ஆனால் கண்டிப்பாக ஓட்டுப்போட வேண்டும். ஒவ்வொரு தொகுதியிலும், 60 சதவீதம், 65 சதவீதம் வாக்குகளே பதிவாகியுள்ளது. மீதமுள்ள 35 சதவீதம் எங்கே போனது. வாக்களிக்காதவர்கள் யாரும் ஜனநாயகத்தைப் பற்றிய கேள்வியே எழுப்பக்கூடாது.
நடந்து முடிந்த தேர்தலில், திமுக வெற்றிபெற்று ஆட்சி அமைத்துவிட்டது. தேர்தலில் வெற்றிபெற்ற கட்சி ஆட்சியில் பிரச்சனை ஏற்படக் கூடாது என்ற கவனத்துடன், அடுத்தகட்ட பணிகளை மேற்கொண்டு வரும் சூழலில், தோல்வியடைந்த கட்சிகள், கட்சிக்குள் களை எடுக்கும் பணிகளைத் துவங்கிவிட்டனர்.
இப்படி, பெரிய பெரிய கட்சிகள் மும்முரமாகச் செயல்பட்டு வரும் நிலையில், தங்களின் அன்றாட பிழைப்பை நோக்கித் திருப்பி வருகின்றனர் சுயேச்சை வேட்பாளர்கள். பெரிய அளவில் எதிர்பார்ப்பு இல்லாமல், தன்னிச்சையாகப் போட்டியிடுபவர்களே சுயேச்சை வேட்பாளர்கள். நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில், ஒரு சுயேச்சை வேட்பாளர் கூட வெற்றிபெறவில்லை.
வெற்றி கிடைக்காது என்று தெரிந்தும், இவர்கள் ஏன் போட்டியிட வேண்டும்?. இதனால் என்ன பயன்? என்று உங்களுக்குத் தோன்றலாம்.
அதற்குப் பதிலாகச் சுயேச்சை வேட்பாளர்கள், 'பெரிய கட்சிகளின் டம்மி வேட்பாளர்கள்' என்று சொல்ல முடியாது. ஆனால், அந்த கருத்தை மறுக்கவும் முடியாது. சில கட்சிகள் தங்கள் தொகுதியில் செலவளிக்கும் தொகைக்குக் கணக்குக் காட்டவும், வாக்கு எண்ணும் இடத்தில் முகவர்களை அதிகப்படுத்தவும் சுயேச்சை வேட்பாளர்களை நிறுத்துவர்.
அனைத்து சுயேச்சை வேட்பாளர்களும் அவ்வாறு இல்லை. சிலர் தங்களின் சொந்த முயற்சியினால் போட்டியிடுகின்றனர். அவ்வாறு போட்டியிட்ட மதுரை தெற்கு தொகுதியைச் சேர்ந்த துலாம் சரவணன், தூத்துக்குடி தொகுதி சிவனேஷ்வர், நாமக்கல் தொகுதி தீபன் சக்ரவர்த்தி ஆகிய மூன்று சுயேச்சை வேட்பாளர்களைத் தொடர்பு கொண்டு அவர்களின் தேர்தல் அனுபவம் பற்றிக் கேட்டறிந்தேன். அவர்களின் பகிர்வுதான், இந்த தொகுப்பு.
துலாம் சரவணன்
தேர்தலுக்கு முன்பாகவே மிகப்பெரிய அளவில் வைரலான நபர். அவரை பற்றி நினைவுபடுத்த விரும்புகிறேன்.
மதுரை தெற்கு தொகுதியில் ஒரு வேட்பாளர் கவர்ச்சிகரமான வாக்குறுதிகளை அளித்துள்ளார் என்று மார்ச் 23 மற்றும் 24 தேதிகளில் ஒரு செய்தி வைரலானது.

அந்நாளில், துலாம் சரவணன் அளித்த பேட்டியில், “என்னிடம் பணம் எதுவும் இல்லை. தற்போது கட்டவேண்டிய தொகையையே கடன் வாங்கியே கட்டியுள்ளேன். மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கில் இதைச் செய்துள்ளேன். தேர்தலில் வெற்றிபெற்றால் இதில் எதைச் செய்ய முடியுமோ, அதை நிச்சயம் செய்வேன்” என்று குறிப்பிட்டிருந்தார்.
தேர்தல் ஆணையத்தின் தளத்தின் தகவல்படி, துலாம் சரவணன் என்னும், ஆர்.சரவணன் 254 வாக்குகள் பெற்றிருந்தார். அவரிடம் தேர்தல் அனுபவம் பற்றிக் கேட்டபோது, “தேர்தலில் இதை விட அதிகமான வாக்குகள் கிடைக்கும் என்று எதிர்பார்த்தேன். ஆனால் குறைவான அளவே கிடைத்துள்ளது.

நான் போட்டியிட்ட தொகுதியில் பெரும்பாலான கட்சிகள் காசு செலவழித்தே வாக்குகளை பெற்றனர். மக்கள் பணம் வாங்கிக்கொண்டே வாக்களித்துள்ளனர்.
ஒரு கல்லூரி மாணவனை அழைத்து எந்த தொகுதியில் இருக்கிறீர்கள் என்று கேட்டால், அவர்களுக்கு அதற்கான பதில் தெரியவில்லை. அடிப்படை அரசியலே தெரியாத சமூகம்தான் தற்போது உருவாகிக் கொண்டிருக்கிறது. அதைத் தான் நான் உணர்த்த வேண்டும் என்று நினைத்தேன். ஒரு இளைஞருக்குத் தேர்தலில் போட்டியிட என்னென்ன செய்ய வேண்டும் என்ற விவரம் தெரியவில்லை. அது தெரிந்தால்தான், அரசியல் என்றால் என்ன என்று அவர்களுக்குத் தெரியும்.
பிரபலமான தலைவர்கள், நீண்டகாலமாக இருக்கும் கட்சிகள், போன்றவற்றைப் பற்றிய எண்ணம் இருக்கிறதே தவிர அரசியல் பற்றிய ஆழமான சிந்தனை எல்லாம் இளைஞர்கள் மத்தியில் இல்லை. நாட்டில் இப்போது என்ன நடக்கிறது என்று இளைஞர்களுக்குத் தெரியவில்லை.
100 சதவீதம் வாக்குப்பதிவு இதுவரை நிகழ்ந்ததில்லை. எந்த கட்சியையும் பிடிக்கவில்லை என்றால், நோட்டாவுக்காவது ஓட்டுப் போட்டிருக்க வேண்டும். ஆனால் கண்டிப்பாக ஓட்டுப்போட வேண்டும். ஒவ்வொரு தொகுதியிலும், 60 சதவீதம் முதல் 65 சதவீதம் வாக்குகளே பதிவாகியுள்ளன. மீதமுள்ள 35 சதவீதம் ஓட்டுகள் எங்கே போனது. வாக்களிக்காதவர்கள் யாரும் ஜனநாயகத்தைப் பற்றிய கேள்வியே எழுப்பக்கூடாது.

சுயேச்சை வேட்பாளராகப் போட்டியிடும்போது அதிகம் கற்றுக்கொள்ள முடியும். அரசியல் கட்சிகள் மூலம் பல தெரிந்துகொள்ள முடியும். அடுத்தடுத்த தேர்தல்களிலும் நான் நிச்சயம் போட்டியிடுவேன்.
நான் போட்டியிடும்போது எந்த பிரச்சனையும் ஏற்படவில்லை. செலவு என்பது நோட்டீஸ் அடித்தது போன்ற செலவுகள் மட்டும் எனக்கு ஆனது.
எனக்குச் சொந்தமாக கட்சி துவங்க வேண்டும் என்ற எண்ணம் இருக்கிறது. அடுத்த தேர்தலில் என் கட்சி சார்பாகப் போட்டியிடலாம் என்று திட்டமிட்டுள்ளேன்.
நடந்து முடிந்த தேர்தலுக்காக நான் வாக்குறுதிகளை அளித்து வைரலானதால், என்னை மக்கள் பார்க்கும் பார்வை மாறியுள்ளது. பெரிய கட்சிகள் பல கோடிகளைச் செலவு செய்யும் போது, நாங்கள் சிறிய அளவில் விளம்பரம் செய்து மக்கள் மத்தியில் டிரெண்டானோம் என்பதற்குப் பலரும் வாழ்த்து தெரிவித்தனர். தொடர்ந்து சமூகப்பணி செய்துகொண்டே இருங்கள், கண்டிப்பாக ஒருநாள் வெற்றிபெறுவீர்கள் என்று என்னிடம் கூறுகின்றனர். ஆனால் என் குடும்பத்தினர் இதற்கு ஆதரவு தரவில்லை” என்று தெரிவித்தார்.
சிவனேஷ்வரன்
சிவனேஷ்வரன் கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்ட சுயேச்சை வேட்பாளர். இந்த முறை தூத்துக்குடி சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டார். இதில் 2849 வாக்குகள் பெற்றிருந்தார். தூத்துக்குடித் தொகுதியில் போட்டியிட்ட சுயேச்சை வேட்பாளர்களில் அதிக வாக்குகள் பெற்றுள்ள சிவனேஷ்வரன், தேர்தலில் போட்டியிடுவதற்கு முன் மக்கள் நீதி மய்யம் சார்பில் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கேட்டிருந்தார். ஆனால் அக்கட்சி சார்பில் வாய்ப்பு வழங்கப்படவில்லை. இந்நிலையில் தான் தனித்துப் போட்டியிட்டார்.

அவரிடம் தேர்தல் அனுபவங்கள் குறித்துக் கேட்டபோது, “2019 மக்களவை தேர்தலிலும், தற்போதைய சட்டமன்ற தேர்தலிலும் நான் போட்டியிட்டேன். மக்களவை தேர்தலில் தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் அடங்கும், சட்டமன்றத்தில் சிறிய பகுதி மட்டுமே இருக்கிறது..
தேர்தலைப் பொறுத்தவரையில் கிராமங்களில் சென்று வாக்கு சேகரிக்கும்போது, மிகவும் சிரமமாக இருக்கும். மக்கள் பெரிய கட்சிகள் பேசவதை கேட்பது போன்று, நான் பேசுவதைக் கேட்பதில்லை. வீட்டிலிருந்து வெளியில் வந்து பார்த்துவிட்டு, கதவை மூடிவிட்டு உள்ளே செல்வார்கள். அப்போது மனதே உடைந்துபோனது போன்று இருக்கும். நகரப் பகுதியில் கொஞ்சம் கவனிப்பார்கள்.
ஆண்கள் மத்தியில் வரவேற்பு இருக்கும். அழைத்துப் பேசுவார்கள். ஆனால், வெற்றி தோல்வியைத் தீர்மானிப்பது பெண்களின் வாக்குகள்தான். பெண்களுக்குப் பெரிய அரசியல் கட்சிகளைப் பற்றி மட்டுமே தெரிந்திருக்கும். இந்த முறை தூத்துக்குடி தொகுதி மட்டும் என்பதால், தொகுதி முழுவதும் பயணித்தேன். பெண்களும் எனக்கு வாக்களிப்பதாகத் தெரிவித்திருந்தனர். ஆனால் 10 நாட்களுக்கு முன் வழங்கப்படும் சின்னத்தை மக்கள் மத்தியில் கொண்டு சேர்க்க முடியவில்லை.
ஊடகங்களும் பெரிய பெரிய அரசியல் தலைவர்கள், பிரசாரம் செய்வதைச் செய்திகளாகப் பதிவு செய்வர். சுயேச்சை வேட்பாளர்களைப் பெரிய அளவில் காண்பிப்பதில்லை. என் கோவம் முழுவதும் ஊடகங்கள் மேலே இருந்தது.

கிராம புறங்களில், சுயேச்சை என்றால் டம்மி வேட்பாளர் என்ற எண்ணம் இருக்கும். அவர்கள் 'யாரு தம்பி உங்கள நிக்க வைச்சிருக்காங்க' என்று கேட்பார்கள். சுயேச்சை வேட்பாளர் என்றால் அப்படிப் பட்ட கெட்ட பெயர் இருக்கிறது. அதை முதலில் மாற்ற வேண்டும்.
நான் சென்று pamphlet வைத்துக்கொண்டு அக்கா, அண்ணா என்று பேப்பர் போடுகிறவர்கள் மாதிரி கூப்பிடுவேன். அதுபோன்ற சூழல் இருக்கும். பெரிய அளவில் கை கொடுத்தது சமூகவலைத்தளங்கள்தான்.
நாடாளுமன்ற உறுப்பினர் தேர்தலில் 50,000 செலவு செய்தேன். சட்டமன்ற தேர்தலில் வாகனம், வண்டி, உணவு என்று 1.5 லட்சம் செலவாகிவிட்டது.
நான் தற்போது ஷாட்அப் நிறுவனத்தில் வேலை பார்த்துக்கொண்டிருக்கிறேன். தேர்தலில் போட்டியிட வேண்டும் என்பதற்காகவே அந்த நிறுவனத்தைத் தேர்ந்தெடுத்து, சேருவதற்கு முன்னரே 20 நாட்கள் விமுறை எடுத்துக்கொள்வேன் என்று தெரிவித்திருந்தேன். அதன்படியே விடுமுறை எடுத்து இந்த தேர்தல் பணிகளை மேற்கொண்டேன்.
என் குடும்பத்தினர் தரப்பில் எந்த ஆதரவும் கிடையாது. ஆசைப்பட்டதைச் செய்ய முடியவில்லை என்று அழுதிருக்கிறேன். நீண்ட போராட்டத்திற்குப் பின் சம்மதம் தெரிவித்தனர். 'எலக்ஷன்ல செலவழிக்கிறதுக்கு, 2 பவனுக்கு செயின் வாங்கி போட்டிருக்கலாம்' என்று என்னிடம் கூறுவதுண்டு.
கட்சி ஆரம்பிக்கும் எண்ணம் தற்போது இல்லை. மக்களைப் பொறுத்தவரையில் நடிகர்கள் கட்சி ஆரம்பிக்க வேண்டும். இந்த சூழலில் நான் ஆரம்பித்தால் எந்த பயனும் கிடைக்காது. அதேபோல் சுயேச்சை வேட்பாளராக நின்றும் வெற்றிபெறுவது சந்தேகமே.
பிற கட்சிகளின் தலைவர்கள் தனிப்பட்ட வகையில், நல்ல தலைவர்களாக இருந்தாலும் அவர்களுடன் பயணிப்பவர்கள் சிறந்தவர்களாக இருப்பார்கள் என்று கூறமுடியாது. உடன் இருப்பவர்களை பொறுத்தே ஒரு கட்சியின் கொள்கைகளும் இருக்கின்றன.
தற்போது வெற்றிப்பெற்றுள்ள, திமுக என்பது குடும்ப அரசியல். மக்களுக்கு அதிருப்தியாக இருந்தாலும், அவர்கள் நிறுத்திய வேட்பாளர்கள் மக்கள் மத்தியில் பிரபலமானவர்கள். அவர்கள் நல்ல வேட்பாளர்களைத் தேர்ந்தெடுக்கின்றனர். இந்த முறை அவர்கள் சரியாகச் செயல்படுவதாகவே தெரிகிறது. என்னைப் பொறுத்தவரையில், ஆட்சியில் ஒரு அணி வெற்றி பெற்றால், எதிர்த்தரப்பில் இருப்பவர் சிறப்பாகச் செயல்படுவாரானால் அவருக்கும் அமைச்சர் பொறுப்பு கொடுக்க வேண்டும்” என்று தெரிவித்தார்.
தீபன் சக்கரவர்த்தி
தீபன் சக்கரவர்த்தி ஒரு யூடியூபர். நடந்துமுடித்த சட்டமன்ற தேர்தலில் எப்படி வேட்புமனு தாக்கல் செய்ய வேண்டும் என்பதை வீடியோவாக வெளியிட்டிருந்தார். இதற்காக, தேர்தலில் போட்டியிடும் சுயேச்சை வேட்பாளர் செய்யும் அனைத்தையும் தீபன் செய்திருந்தார்.

தீபன் சக்கரவர்த்தியை தொடர்பு கொண்டு, தேர்தல் அனுபவங்கள் பற்றிக் கேட்டபோது, “அடிப்படையில் நான் ஒரு செய்தியாளர். சென்னையில் செய்தியாளராக பணியாற்றி, வேலையை விட்டுவிட்டு, யூடியூபராக செயல்பட்டு வருகிறேன். இந்த தேர்தலுக்கு என்ன செய்யலாம் என்று யோசிக்கும்போது, மற்ற சேனல்களில், வெற்றி தோல்வி குறித்து வெளியிடுவதைப் பார்க்க முடிந்தது. எனக்குச் சிறிய வயதிலிருந்தே, அரசியலில் ஆர்வம் இருந்ததால், ஒரு தேர்தலில் போட்டியிடுவதாக இருந்தால் வேட்பாளர்கள் எப்படி மனுத்தாக்கல் செய்வது?, மனுவை எங்கிருந்து வாங்குவது?, பிரமாண பத்திரம்னா என்ன?, எப்படி பூர்த்தி செய்வது?, என்னென்ன சான்றிதழ்கள் தேவை என்று படிப்படியாக என்னுடைய சேனலில் பதிவிட்டுக்கொண்டிருந்தேன்.
ஒரு செய்தியாளராக இருக்கும் போது, ஒரு நிறுவனத்தின் கீழ், அவர்கள் கூறுவதையே செய்ய முடியும். யூடியூபர் செய்தியாளராக (Journalist) இருக்கும் போது நினைத்ததைச் செய்ய முடிகிறது. என்னுடைய சப்ஸ்கிரைபர்ஸ் (subscribers) நல்ல வரவேற்பைக் கொடுத்தனர். 2லட்சத்திற்கும் அதிகமான சப்ஸ்கிரைபர்ஸ் இருந்தாலும், நான் நாமக்கல்லில் போட்டியிடுவதால் குறைந்த அளவே வாக்குகள் கிடைக்கும் என்பதை முன்னரே எதிர்பார்த்தேன். இதன் மூலமாகத் தமிழ்நாடு முழுவதும் உள்ள மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்பதே நோக்கமாக இருந்தது. வீடியோவை பார்த்த பின் 2 தொகுதிகளில் சுயேச்சை வேட்பாளர்கள் அனுபவத்திற்காகப் போட்டியிட்டிருந்தனர். வேறு சிலர் அடுத்த தேர்தலில் போட்டியிடுவதாகத் தெரிவித்துள்ளனர்.

தேர்தலில் பணம் இருந்தால் மட்டுமே எதிர்கொள்ள முடியும். தேர்தல் ஆணையம் ஒரு எம்.எல்.ஏ வேட்பாளருக்கு 30 லட்சம் செலவு செய்ய உச்ச வரம்பு கொடுத்துள்ளது. என்னை பொறுத்தவரையில், 30 லட்சமே பெரிய விஷயம். பெரிய கட்சிகள் கணக்குக் காட்டுவது மட்டும் 30 லட்சமாக இருக்கும். ஆனால், அதிக அளவில் செலவழிக்கின்றனர். என் நோக்கம் விழிப்புணர்வு ஏற்படுத்துவது மட்டும்தானே தவிர, ஓட்டு வாங்குவது கிடையாது. 10ஆயிரம் டெபாசிட் பணத்தைத் தவிர, 2.4 ஆயிரம் அளவில் செலவழித்திருப்பேன்.
வீட்டில் இதற்கு ஆதரவான சூழலே இருந்தது. சிறிய வயதிலிருந்தே சமூகம், அரசியல் சார்ந்த விஷயங்களிலேயே நான் ஆர்வாக இருப்பேன். அதனால் அவர்கள் ஆதரவு கொடுத்தனர்.
இந்த தேர்தல் நான் போட்டியிட்டதால், நாமக்கல்லில் உள்ள சில அரசியல் தலைவர்கள் தரப்பில் அவர்கள் கட்சியில் சேருவதற்காகக் கேட்டிருந்தனர். எனக்கு தற்போது அரசியலில் சேர விரும்பமில்லை.
திமுக, அதிக பெரும்பான்மையுடன் வெற்றிபெற்றது மக்களின் தீர்ப்பு. 10 ஆண்டுகள் அதிமுக ஆட்சியிலிருந்திருக்கிறது. அவர்களுக்கு எதிராகப் பெரிய அளவில் ஒரு எதிர்ப்பு அலை இருக்கிறது என்று கூறியிருந்தனர். ஆனால், அத்தகைய சூழல் இல்லை. அதிமுகவிற்கு எதிராக எதிர்ப்பு இருந்திருந்தால், அவர்கள் 50 இடங்களைக் கூட கைப்பற்றியிருக்கமாட்டார்கள்” என்று தெரிவித்தார்.
