'சட்டத்தை மீறிச் செயல்பட்டோம்...!' ஈஷாவின் கடிதம்- முழு விவரங்களுடன் அலசல்
“இனி ஜக்கி வாசுதேவ் பற்றி பேசப்போவதில்லை. என்னிடம் இருக்கும் ஆதாரங்களை அதற்குரிய அதிகாரிகளிடம் ஒப்படைப்பேன். என்னால் நடவடிக்கை எடுக்க முடியாது. சட்டத்திற்குட்பட்டு, அதற்குரிய இந்திய மற்றும் அமெரிக்க அதிகாரிகள் நான் உட்பட, யாருடைய தலையீடும் இல்லாமல் விசாரணை நடத்துவார்கள்”
“மாநில சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையத்தின் (SIEAA) சுற்றுச்சூழல் அனுமதி பெறாமல், EIA 2006 சட்டத்தை மீறி நாங்களே எங்கள் கட்டிடங்களைக் கட்டிவிட்டோம், அதனால் அனுமதி வாங்குவதற்குத் தேவைப்படும் ஆய்வு எல்லைகளை வரையறுத்துத் தாருங்கள்” என்று நேற்றைய தினம் (22.05.2021), பூவுலகின் நண்பர்கள் அமைப்பின், டிவிட்டர் பக்கத்தில் பதிவிடப்பட்டு, ஒரு அறிக்கை போடப்பட்டிருந்தது.
“மாநில சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையத்தின்”(SIEAA) சுற்றுச்சூழல் அனுமதி பெறாமல், EIA 2006 சட்டத்தை மீறி நாங்களே எங்கள் கட்டிடங்களை கட்டிவிட்டோம்,அதனால் அனுமதி வாங்குவதற்கு தேவைப்படும் ஆய்வு எல்லைகளை (TOR)வரையறுத்து தாருங்கள்”என @ishafoundation நிறுவனம் அனுப்பிய கடிதம். pic.twitter.com/SPSaHeKyXH
— பூவுலகின் நண்பர்கள் (@Poovulagu) May 21, 2021
அதில் குறிப்பிடப்பட்ட அறிக்கை 12.04.2018-ல் ஈஷா யோகா மையத்தின் சார்பாக மாநில சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது. நேற்றைய தினம் இது சுற்றுச்சூழல் ஆர்வலர்களிடம் கிடைத்ததால், ஊடகங்கள் மற்றும் சமூகவலைத்தள பக்கங்களில் வெளியிடப்பட்டு வருகிறது.
அந்த அறிக்கையில், “நாங்கள் கட்டியுள்ள கட்டிடம் 2006 -ம் ஆண்டு சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டுச் சட்டத்தை மீறியுள்ளது. விதிமீறல்கள் குறித்து மார்ச் 14 2017 வழங்கு தொடரப்பட்டு உள்ளது.
எங்களுடைய விண்ணப்பத்தை ஏற்று, இந்த கடிதத்திற்காக எல்லைகளைச் சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டிற்கு வரையறுத்துத் தரும்படி தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம். இதை விரைந்து முடிக்கத் தாழ்மையுடன் கேட்கிறோம்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
வெள்ளிங்கிரி மலை அடிவாரத்தில் அமைக்கப்பட்டுள்ள ஈஷா யோக மையத்தின் மீது பல நேரங்களில், பல குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டு வருகிறது. இதனைத் தொடர்ந்து தற்போது 2018-ம் ஆண்டில் அனுப்பப்பட்ட அறிக்கையை தற்போது சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் இணையத்தில் பரப்பி வருகின்றனர்.
விதி மீறல்?
ஈஷா யோகா மையம் 4,87,418 சதுர மீட்டர் அளவில் அமைந்துள்ளது. இதில் சித்திரா கட்டடம், தியான மண்டபம் பகுதி, ஸ்பண்டா ஹால், ஆதியோகி தியான மண்டபம், ஈஷா பள்ளி, காவேரி, நர்மதா, நொயால், மற்றும் நேத்ராவதி குடியிருப்புகள். மொத்தமாக 68 கட்டங்களை ஜக்கி வாசுதேவ் சட்டவிரோதமாகக் கட்டியுள்ளதாக, கூறப்படுகிறது.

“சுற்றுச்சூழல் சார்ந்த விஷயங்களில் விதி மீறல்களில் ஈடுபட்டால் அதற்கு அபராதம் செலுத்தப்பட வேண்டும், என்பதே சட்டம்” என்று newslaundry தளத்தில் அதிகாரி ஒருவர், ஈஷா விஷயத்தில் தெரிவித்துள்ளார்.
2020 மார்ச் மாதம் ஈஷாவால் கொடுக்கப்பட்ட விண்ணப்பத்திற்காகக் கூட்டம் நடத்தப்பட்டபோது, பொதுப்பணித்துறை, மலைப் பகுதி பாதுகாப்பு ஆணையம் மற்றும் காடுகளின் பாதுகாப்பு ஆணையங்களால் வழங்கப்பட்ட விதிமுறைகளுக்கு இணக்குவதாக அறிக்கை அளிக்கும்படி ஈஷா யோகா மையத்தை, சுற்றுச்சூழல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது. அதேபோல் ஈஷா யோக மையத்தால் நீர் வழங்கல் அங்கீகரிக்கப்பட்டுள்ளதா? என்பது பற்றிய ஆதாரத்தை சமர்ப்பிக்கவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்பின் இது பற்றிய விரிவான தகவல்கள் எதுவும் வெளியானதாகத் தெரியவில்லை. கொடுக்கப்பட்ட விண்ணப்பத்தைத் திரும்பப் பெறுவதாக ஈஷா தரப்பில் ஒரு கோரிக்கை அனுப்பப்பட்டுள்ளது. அதற்கான விவரங்களும் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

தற்போதைய சூழலில் ஈஷா யோக மையம் பற்றி பெரிய அளவில் பேசப்படுவதற்கு இரண்டு முக்கிய காரணங்களைக் கூறலாம். ஒன்று, “இந்து அறநிலையத்துறையிடம் இருக்கும் கோவில்களைப் பொதுமக்களிடம் ஒப்படைக்க வேண்டும்” என்று ஜக்கி வாசுதேவ் பேசியது. இரண்டாவது, அமைச்சர் தியாகராஜனின் கருத்து.
நிதி துறை அமைச்சர் தியாகராஜன் தனியார் செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில், “ஜக்கி வாசுதேவ் சட்ட மீறல்களில் ஈடுபடுபவர். அவர் மீது விரைவிலே, பின்னரே நடவடிக்கை எடுக்கப்படும்” என்று பேசியிருந்தார்.
அதனைத் தொடர்ந்து, 19-ம் தேதி தனது டிவிட்டர் பக்கத்தில் “இனி ஜக்கி வாசுதேவ் பற்றி பேசப்போவதில்லை. என்னிடம் இருக்கும் ஆதாரங்களை அதற்குரிய அதிகாரிகளிடம் ஒப்படைப்பேன். என்னால் நடவடிக்கை எடுக்க முடியாது. சட்டத்திற்குட்பட்டு, அதற்குரிய இந்திய மற்றும் அமெரிக்க அதிகாரிகள் நான் உட்பட, யாருடைய தலையீடும் இல்லாமல் விசாரணை நடத்துவார்கள்” என்று விரிவான தகவல்களுடன் அறிக்கை வெளியிட்டிருந்தார்.
I request the kind indulgence of my friends in the media to allow me to focus on efforts related to COVID19. I have a backlog of requests I simply cannot process. My team will post videos of concluded interviews and issue statements as necessary based on developments (as below) pic.twitter.com/035nztnic3
— Dr P Thiaga Rajan (PTR) (@ptrmadurai) May 19, 2021
யானைகள் வழித்தடத்தில் ஈஷா யோகா மையம்?
கோவையில் ஒரு யானை இறந்தாலும், அதுபற்றி செய்தி வெளியாகும்போது, ஈஷா யோக மையத்தின் பெயர் அடிபடாமல் இருந்ததில்லை. மலை அடிவாரத்தில் அமைக்கப்பட்டுள்ள யோகா மையம் நூற்றுக்கும் மேற்பட்ட யானைகளின் உயிர்களைப் பறித்துவிட்டதாகத் தொடர்ந்து சுற்றுச் சூழல் ஆர்வலர்கள் குறிப்பிட்டு வருகின்றனர்.
இது குறித்து வழக்கறிஞரும் சூழலியல் ஆர்வலருமான சிவா குறிப்பிடுகையில், “பலரும் இது பற்றி குழப்பத்தில் உள்ளனர். ஈஷாவே தங்களது யோகா மையம் யானைகள் வழித்தடத்தில் இல்லை என்று குறிப்பிட்டு வருகிறது.
யானைகள் தங்கள் தேவைகளுக்காகச் சென்றுவரும் பாதைகளை வலசை பாதை (elephant corridor) என்று குறிப்பிடுகின்றனர். பாலக்காடு கணவாய் என்று சொல்லக்கூடிய மேற்குத் தொடர்ச்சி மலையின் பகுதி, வருடத்திற்கு 8 மாதங்கள் வரை மழை பொழியக்கூடிய கோயம்புத்தூர் பூலாம்பட்டி பகுதி, நெய்யலாறின் பிறப்பிடம் பகுதி ஆகியவை ஒரே இடத்தில் இருக்கின்றன. இந்த பகுதி சுற்றுச்சூழலுக்கு மிக முக்கியமான பகுதியாக இருக்கிறது.

யானைகளுக்கு, பூலாம்பட்டி ஒரு வாழ்விடமாகவும், அட்ட பாடி மற்றொரு வாழிடமாகவும் இருக்கிறது. யானைகளின் வாழ்வில் இந்த வலசை பாதை மிக முக்கியமானது. அதேபோல் யானைகள் வாழிடத்தில் எந்த தொந்தரவும் இருக்கக் கூடாது என்பது அறிவியல் பூர்வமான உண்மை. தற்போது ஈஷா யோக மையம் இருக்கும் இடம் சரியாக ஒரு யானைகளின் வாழ்விடம்.
வனத்துறையினர் மருதமலை-தாணிக்கடி யானைகள் வழித்தடத்தில் ஈஷா யோகா மையம் அமைந்துள்ளது என்று குறிப்பிடுகின்றனர்.
மொத்தத்தில் கோயம்புத்தூர் வனப்பகுதி 624 சதுர கிலோமீட்டர். இதில் 562 சதுர கிலோமீட்டர், யானைகளின் வாழ்விட பகுதி என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது யானை காடு. யானை காடுகளில் யானைகள் தான் இருக்க வேண்டும்” என்று குறிப்பிட்டார்.
ஜக்கி வாசுதேவ்
ஜக்கி வாசுதேவ் பற்றி கடந்த மாதம் எழுதியிருந்த கட்டுரையில் சில தகவல்கள் குறிப்பிட்டிருந்தேன். அதைத் தாண்டி சில தகவல்கள் இங்குக் குறிப்பிட வேண்டியுள்ளது.
ஜக்கி வாசுதேவின் வாசகமே “அத்தனைக்கும் ஆசைப்படு” என்பதுதான். இந்த கருத்தை முன்னிறுத்தி அவர், தனது பக்கத்தில் பிரபலங்களை இழுத்துக்கொள்கிறார் என்று விமர்சனம் எழுவதுண்டு. ஜக்கியின் ஈஷா யோக மையத்திற்கு, குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் சென்றுள்ளனர்.
ஜக்கி ஞானம் பெற்று, வெள்ளிங்கிரி மலை அடிவாரத்தில் தியானம் செய்து, அந்த பகுதியில் ஈஷா யோக மையத்தை அமைத்ததாக அவர் தரப்பில் கூறப்படுகிறது. ஆனால் இதை சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் தரப்பில் ஏற்க மறுக்கின்றனர்.
அவர் செய்யும் ஒவ்வொரு விஷயங்களும் பொதுவெளியில் விமர்சிக்கப்பட்டே வருகிறது. ஜக்கியின் மனைவியின் மரணம், மகள் திருமணம் என்று அனைத்திலும் விமர்சனத்திற்குள்ளானார்.
“2006-ம் ஆண்டு திமுக ஆட்சியின் போது விசிக தலைவர் திருமாவளவன் ஜக்கியை சென்று சந்தித்துள்ளார். அதே வேளையில் நக்கீரன் காமராஜ் ஜக்கியிடம் யோக பயிற்சி எடுத்துக்கொண்டார். அவர் மூலமாக முதலமைச்சரைச் சந்தித்த ஜக்கி வாசுதேவ், காட்டுப்பகுதியில் ஒற்றையடிப் பாதையாக இருந்த யோக மையத்திற்குச் செல்லும் சாலையை விரிவுப்படுத்தினார்” என்று savukkuonline இணையதள பக்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதேபோல் ஜக்கியின் யோகா மையத்தில் எந்த பொருட்கள் வாங்கினாலும், பில் தரப்படுவதில்லை, ஒருவேளை நீங்கள் ரசீது கேட்டால், நன்கொடை அளித்ததாகத் பில் தரப்படும். காரணம், ஆன்மீக தலங்களில் குறிப்பிட்ட மத அடிப்படை அல்லாமல் அளிக்கப்படும் நன்கொடைகளுக்கு வருமான வரித்துறை சட்டம் பிரிவு 80Gன் படி விலக்கு அளிக்கப்பட்டுள்ளது, என்றும் savukkuonline பக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜீன்ஸ் அணிந்துகொண்டு பைக் ஓட்டுவது, சிற்பங்கள் செதுக்குவது, எழுதுவது என்று எல்லாத்துறையிலும் வல்லுநராகக் குறிப்பிடப்படும் ஜக்கிவாசுதேவ் விளம்பரத்திற்காக இவ்வாறு செய்கிறார் என்ற விமர்சனமும் இல்லாமல் இல்லை. ஈஷா யோக மையத்தில் 14 அடி உயரமுள்ள தியான லிங்கம் ஒன்று அமைந்துள்ளது இந்த தியான லிங்கத்தை ஜக்கி வாசுதேவும், பிரம்மச்சரியம் பூண்டவர்களாலும் உருவாக்கப்பட்டதாக ஜக்கி வாசுதேவ் குறிப்பிட்டு வருகிறார். இது குறித்து savukku பக்கத்தில் “ தியான லிங்கத்தின் மொத்த உருவாக்கமும் ஜக்கி வாசுதேவின் எண்ணத்தில் உதித்தவை. மொத்த வடிவத்தையும் சத்குரு உருவாக்கினார். பிரம்மச்சாரி பொறியாளர்களின் உதவியோடும், அப்பகுதி மக்களில் 300 வேலையாட்களின் துணையோடும் அந்தத் திட்டத்தை செயல்படுத்தினார் ஜக்கி, என்று கூறுகிறது ஈஷா.
ஆனால் இந்த லிங்க கோயிலுக்கான வரைபடம், திட்டம், செயல்படுத்துதல், கட்டுமானம் என்று அனைத்தையும் செய்தது, பாண்டிச்சேரியில் உள்ள ஆரோவில் எர்த் இன்ஸ்ட்டிடியூட். இணைப்பு இப்படி ஒரு சாதாரண கட்டுமான வேலைகளில் கூட, பொய்யுரைக்கும் சத்குருவின் உண்மை முகத்தைப் புரிந்து கொள்ளுங்கள்.”என்று பதிவிட்டுள்ளார்.

உண்மையில், ஆரோவில் இணையதளத்தில் நீங்கள் இதைப் பார்க்க முடியும். இதில் யார் கூறுவது உண்மை என்று புரிந்துகொள்ள முடியவில்லை. அந்த தகவலை இத்துடன் இணைத்துள்ளேன்.
ஜக்கி வாசுதேவ், படங்கள் ஈஷா சமூகவலைத்தள பக்கத்திலிருந்து எடுக்கப்பட்டது
