இல்லம் தேடி கல்வித்திட்டம் ஏன் தேவை? கல்வியாளர் விளக்கம்
இல்லம் தேடி கல்வித் திட்டத்திற்கு, அரசியல் தலைவர்கள் எதிர்ப்பும் ஆதரவும் தெரிவித்து வருகின்றனர். எதிர்ப்பு தெரிவிப்பவர்கள் மத்தியில், இது தேசிய கல்விக் கொள்கையை ஆதரிப்பது போன்று உள்ளதாகக் குற்றம்சாட்டப்படுகிறது.
இல்லம் தேடி கல்வித் திட்டத்தை முதலமைச்சர் ஸ்டாலின் நேற்றைய தினம் துவங்கி வைத்தார். ஒன்றரை வருடங்களாக போதிய கல்வி பெறாத பள்ளி மாணவர்களுக்குக் கல்வியறிவை புகட்டும் விதமாக இந்த திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது.
விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் வட்டம், முதலியார்குப்பத்தில் “இல்லம் தேடிக் கல்வி” திட்டத்தை மாண்புமிகு முதலமைச்சர் @mkstalin அவர்கள் தொடங்கி வைத்து, மாணவ, மாணவியர் கல்வி கற்பதை பார்வையிட்டு, அவர்களுடன் உரையாடினார். pic.twitter.com/3YIPSGSHSh
— CMOTamilNadu (@CMOTamilnadu) October 27, 2021
திட்டத்தின் நடைமுறை மற்றும் வழிகாட்டுதல் நெறிமுறை?
அக்டோபர் 27-ம் தேதி முதலமைச்சர் ஸ்டாலின் விழுப்புரம் மாவட்டத்தில் இல்லம் தேடி கல்வித் திட்டத்தைத் துவங்கி வைத்தார். இந்த திட்டம் முதல்கட்டமாகக் காஞ்சிபுரம், விழுப்புரம், மதுரை, திருச்சி, நாகப்பட்டினம், கன்னியாகுமரி, கிருஷ்ணகிரி, நீலகிரி உட்பட 12 மாவட்டங்களில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. இதற்கு ஆர்வமுடைய தன்னார்வலர்கள் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.
கற்பிக்கப்படும் இடத்தில் இருக்க வேண்டிய வசதிகள்
போதுமான மின்சாரம் மற்றும் குடிநீர் வசதி இருக்க வேண்டும். தேர்ந்தெடுக்கப்படும் இடம், மதச்சார்பற்ற மற்றும் பாகுபாடற்ற இடமாக இருக்க வேண்டும். 20 குழந்தைகளுக்கு ஒரு தன்னார்வலர் நியமிக்க வேண்டும். வகுப்புகளுக்கான பாடத் திட்டத்தை மாநில கல்வியியல் ஆராய்ச்சி நிறுவனம் தயாரித்து வழங்கும். வகுப்புகள் தினமும் மாலை 5 மணி இரவு 7 மணி வரை ஒரு மணி நேரம் அல்லது ஒன்றரை மணி நேரம் நடத்தப்பட வேண்டும். தன்னார்வலர்களுக்குப் பாராட்டு சான்றிதழ் மற்றும் விருதுகள் வழங்கப்படும். ஊக்கத்தொகையும் உண்டு. மாநில அளவிலான இந்த திட்டம் அடுத்த ஆண்டு மே மாதம் வரை நடைபெறும்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
திட்டத்திற்கு அரசியல் தலைவர்கள் எதிர்ப்பு ஆதரவும் தெரிவித்து வருகின்றனர். எதிர்ப்பு தெரிவிப்பவர்கள் மத்தியில், இது தேசிய கல்விக் கொள்கையை ஆதரிப்பது போன்று உள்ளதாகக் குற்றம்சாட்டப்படுகிறது.
இது பற்றி, கல்வியாளர் முருகையன் பக்கிரிசாமி கூறுகையில், “இல்லம் தேடி கல்வித் திட்டம் பற்றிப் பல புரிதல்கள் இருக்கிறது. 9 முதல் 12-ம் வகுப்பு வரை பள்ளிகள் திறப்பிற்கு முன் மூன்று விதமான அறிக்கையுடன், முதலமைச்சரைச் சந்திக்க அமைச்சர் உள்ளிட்ட அதிகாரிகள் சென்றுள்ளனர். அப்போது அவர்கள், பள்ளியில் மேற்கொள்ள இருக்கும் நடவடிக்கையைப் பற்றிக் குறிப்பிட்டுள்ளனர். முதலமைச்சர் அவர்களிடம், இரண்டு வருடமாகப் படிக்காமல் பள்ளிக்கு வரும் குழந்தைகளுக்கு என்ன செய்யப் போகிறீர்கள்? என்று கேட்டுள்ளார். அது அதிகாரிகளுக்கு ஆச்சரியத்தைக் கொடுத்துள்ளது.
நிதியமைச்சர் பட்ஜெட் தாக்கல் செய்யும் போது இல்லம் தேடி கல்வித்திட்டத்திற்கு 200 கோடி ரூபாய் ஒதுக்குவதாக அறிவிக்கத் துண்டுத் தாளில் எழுதிக் கொடுத்துள்ளார். இது பற்றி அறிவித்த பின்னரே, கல்வி அமைச்சருக்கு விவரம் தெரிந்திருக்கிறது. இது ஒன்றிய அரசின் பங்களிப்பு இல்லாமல் முழுமையாக மாநில அரசின் பங்களிப்பில் கொண்டுவரப்பட்டுள்ளது.
இதில் 2 லட்சத்து 70 ஆயிரம் தன்னார்வலர்கள் வேண்டும் என்று கூறுகிறார்கள். கிட்டத்தட்ட 24 ஆயிரம் தொடக்க பள்ளிக்கூடங்கள், 7 ஆயிரம் நடுநிலை பள்ளிக்கூடங்கள் உள்ளது. இவர்களுக்குச் சொல்லிக்கொடுக்கத் தன்னார்வலர்கள் தேவைப்படுகிறார்கள். 12-ம் வகுப்பு வரை படித்தவர்கள் 5-ம் வகுப்பு வரையிலும், மேற்படிப்பு படித்தவர்கள் 6 முதல் 8-ம் வகுப்பு வரையிலும் நியமிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. அதைத் தவிர ஓய்வு பெற்ற ஆசிரியர்கள், சமூக ஆர்வலர்கள் யார் வேண்டுமானாலும் விண்ணப்பிக்கலாம் என்று கூறியுள்ளனர்.
இணையம் கல்வியின் போது மாணவர்களுக்கு எழுத்து எப்படி எழுத வேண்டும் என்றே தெரியாது. ஒன்றாம் வகுப்பும், இரண்டாம் வகுப்பு படிக்காத குழந்தைகள் நேரடியாக மூன்றாம் வகுப்பிற்கு வந்தால், அவர்கள் எப்படி எழுத்துக் கூட்டிப் படிக்க முடியும்?. அந்த இடைவெளியை நிரப்பப் போவதாகக் கூறுகிறார்கள்.
மாணவர்கள் இவ்வளவு நாட்கள் சும்மா இருந்துவிட்டு தற்போது பள்ளிக்குச் செல்லும் வேளையில் இதைச் செய்வது சரியானதா? என்று பலரும் கேள்வி எழுப்புகின்றனர். ஆனால் இந்த திட்டத்தில், பள்ளியில் சொல்லிக்கொடுக்கும் பாடம் திரும்பச் சொல்லிக் கொடுக்கப்படுவதில்லை. மாநில கல்வி ஆராய்ச்சி கழகம் கையேடு ஒன்றை தயாரித்துள்ளது. அதன் அடிப்படையிலேயே செயல்படுத்த உள்ளனர். அதேபோல் இது அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மட்டுமா? என்று கேள்வி எழுப்பினர், அதற்குக் கல்வி அமைச்சர், தனியார்ப் பள்ளிகளில் படிக்கிற பிள்ளைகள், விரும்பி வருகிறார்கள் என்றால், அவர்களுக்கும் சொல்லிக் கொடுப்பதாகவே கூறியுள்ளனர்.
அரசு என்ன சொல்கிறது என்றால், சமூகத்திலிருந்து கற்றுக்கொண்டதை சமூகத்திற்குக் கொடுக்க கூறுகிறார்கள். மக்களின் வரிப் பணத்தில் ஒரு பைசா கூட வீணாக்கமாட்டோம் என்பது எல்லாம் முதலமைச்சர் கூறியிருக்கிறார்.
அரசியல் தலைவர்கள் வீரமணி மற்றும் முத்தரசன் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். தேசிய கல்விக்கொள்கையைப் புகுத்துவதாகக் குறிப்பிடுகின்றனர். தேசிய கல்வி கொள்கையின் முழு பக்கத்தையும் அனைவரும் முதலில் படித்திருக்க வேண்டும். எனக்கும் அச்சம் இருந்தது. கல்வித்துறை அமைச்சர் கூறுகையில், இந்த தன்னார்வலர்களைக் கண்காணிக்கக் குழு அமைக்கப்படும் என்று குறிப்பிட்டுள்ளார். எந்த காரணத்தைக் கொண்டும் தன்னார்வலர்கள் தங்களின் சொந்த கருத்தை மாணவர்களுக்குச் சொல்லாத வண்ணம் பார்த்துக்கொள்ளும்படி திட்டம் வகுக்கப்பட்டுள்ளது.
தேசிய கல்விக் கொள்கையைப் பொறுத்தவரையில், 3-ம் வகுப்புவரை பள்ளிக்குச் செல்ல வேண்டாம் என்று கூறுகிறது. வீட்டிலிருந்தே படிக்கலாம் என்ற வகையில் குறிப்பிடுகின்றனர் அதை ஏற்க முடியாது. தமிழ்நாட்டில், இடைவெளியைக் குறைக்க மட்டுமே இந்த திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசு அதை உணர்த்தும் விதத்தில், இல்லம் தேடி கல்வித் திட்டம், தேசிய கல்வி கொள்ளையின் பிரதிபலிப்பாக இருக்காது என்பதைக் குறிப்பிட வேண்டும். முற்றிலும் தேசிய கல்விக் கொள்கையை எதிர்கிறோம் என்பது உள்ளிட்டவற்றை அறிக்கையாகக் குறிப்பிட வேண்டும். இல்லம் தேடி கல்வி திடத்தின் மூலம் பாதியில் படிப்பை நிறுத்திய மாணவர்களைப் பள்ளிகளுக்குக் கொண்டுவர நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்” என்று தெரிவித்தார்.
