அதி தீவிர மழையில் தப்பிக்க முடியாமல் மாட்டிக்கொள்கிறோம்! என்ன காரணம்?
தொடர் மழை வெள்ளப்பெருக்கால், வீட்டில் சமைப்பது முதல், பெரிய நிறுவனங்களில் இயந்திரங்கள் இயங்குவது வரை எல்லாமே பிரச்சனைக்குரிய விஷயமாகவே மாறி வருகிறது.
மிகச் சமீபத்தில், சென்னையில் காலநிலை மாற்றத்திற்கான குடை பேரணி நடத்தப்பட்டது. அந்த பேரணி முடிந்த பின், அடுத்தடுத்து ஒவ்வொரு மாவட்டத்திலும் விடாமல் மழை கொட்டி தீர்த்து வருகிறது. முதலில் குறிப்பிட்ட, நிகழ்வு மழைக்குக் காரணம் அல்ல, எதற்காக அந்த நிகழ்வு நடத்தப்பட்டதோ, அது மழைக்குக் காரணமாகியுள்ளது.
தமிழ்நாடு மட்டுமல்ல இந்தியா முழுக்கவே அதி தீவிர மழையை நீங்கள் பார்க்க முடியும். கடந்த ஆண்டு கேரளாவில் ஏற்படுத்திய பாதிப்பை இந்த ஆண்டு ஆந்திரா சந்தித்துள்ளது. ஆந்திரா மட்டுமல்ல இன்னும் பல மாநிலங்கள் சந்திக்கின்றன. அதற்காகக் கேரளாவில் மழை இல்லையா? என்று கேட்க வேண்டாம். பத்தனம்திட்டா, கோட்டயம், எர்ணாகுளம், இடுக்கி, திருச்சூர் ஆகிய கேரள மாநிலங்கள் கடும் வெள்ளப்பெருக்கில் சிக்கி தற்போது விடுபட்டு வருகின்றன. வீடு ஒன்று ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட கோரக் காட்சி பலமுறை பதிவிடப்பட்டு வைரலானது. அதன் பின், தமிழ்நாடு, ஆந்திரா என்று அனைத்து மாநிலங்களிலும், வீடுகளை ஆறுகள் விழுங்கிய காட்சிகளை நாம் பார்த்துக்கொண்டிருக்கிறோம்.
தமிழ்நாட்டில் தற்போது வழக்கமாக மழைக் காலம்தான். இருந்தாலும், ஒரே நாளில் இவ்வளவு மழை என்பது அதீத பருவநிலை மாற்றத்திற்கான அறிகுறி என்று இயற்கை ஆர்வலர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். அதேபோல் இயற்கையின் வடிவமைப்பை நாம் மாற்றி அமைக்க முயற்சிப்பதும் முக்கிய காரணமாகிறது.
தனியார் வானிலை ஆய்வாளர் கூறுகையில், “2015 el nino year, அந்த ஆண்டில் சராசரியைவிட 2 அரை டிகிரி வெப்ப நிலை அதிகமாக இருந்தது. அப்போது கடல் வெப்பத்தை உள்வாங்கியது. கடல் வெப்பநிலையை உடனடியாக எப்போதும், வெளிவிடுவதில்லை. படிப்படியாக மட்டும் வெளிவிடுகிறது. அதன்படி, அதன் அடுத்தடுத்த ஆண்டுகளில் கடும் வெப்பநிலை நீடித்ததை நீங்கள் பார்த்திருக்க முடியும்.
இது ஒரு சுழற்சி முறை, கடல் வெப்பம் அதிகமானால், ஆவியாகுதல் அதிகரிக்கும். அவ்வாறு அதிகரிக்கும் பட்சத்தில், அதிக அளவில் மழை பொழிவு ஏற்படும்” என்று தெரிவித்தார்.
பூவுலகின் அமைப்பைச் சேர்ந்த சுந்தர் ராஜன் தனது டிவிட்டர் பக்கத்தில், “கன்னியாகுமரி மாவட்டம் தற்போது மிதப்பதற்கு ஒரு முக்கியமான காரணம், அங்குள்ள மலைகள் உடைக்கப்பட்டு அது குவாரிகளாக மாற்றப்பட்டு, கேரளாவிற்குக் கல் கடத்தப்படுவதுதான். மலைகளில் உள்ள மரங்கள், தாவரங்கள், புதர்கள், புல்வெளிகள் எல்லாம் மழை பொழியும் போது தண்ணீர் வேகமாகச் சென்றுவிடாமல் மெதுவாகத் தடுத்து அனுப்பும், கீழே உள்ள பகுதிகளில் திடீர் வெள்ளம் தவிர்க்கப்படும்.
இப்போது மலைகள் தகர்க்கப்படுவதால் தண்ணீர் விரைவாக ஓடி, வெள்ளம் ஏற்படுத்தி, கடலுக்குள் சென்று கலந்துவிடும். குமரி மற்றும் நெல்லை மாவட்டங்களில் உள்ள கல்குவாரிகளிலிருந்து பாறைகள் கேரளாவில் உள்ள துறைமுகத்திற்கு அனுப்பியதன் விளைவைக் குமரி மாவட்டம் அனுபவித்து வருகிறது. ஏற்கனவே, 'மீண்டும் தேவைப்படும் குமரி மீட்பு போராட்டம்' என்று எழுதியிருந்தேன்.
முதல்வரே, குமரி வெள்ளத்தில் தத்தளித்ததை சில நாட்களுக்கு முன்னர் நாம் பார்த்தோம், இது குறித்து இப்போது கூட முடிவெடுக்கவில்லை எனில் குமரி மாவட்டத்தை நம்மால் காப்பாற்ற முடியாது, கேரளா, கடந்த பல ஆண்டுகளாக மேற்கு மலைகளைக் காப்பாற்றத் தவறியதன் விளைவை இப்போது சந்திக்கிறது. இதே நிலை குமரி மாவட்டத்திற்கு வராமல் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், செய்வீர்களா” என்று பதிவிட்டிருந்தார்.
கன்னியாகுமரி மாவட்டம் தற்போது மிதப்பதற்கு ஒரு முக்கியமான காரணம், அங்குள்ள மலைகள் உடைக்கப்பட்டு அது குவாரிகளாக மாற்றப்பட்டு, கேரளாவிற்கு கல் கடத்தப்படுவதுதான். மலைகளில் உள்ள மரங்கள், தாவரங்கள், புதர்கள், புல்வெளிகள் எல்லாம் மழை பொழியும் போது தண்ணீர் வேகமாக சென்றுவிடாமல் மெதுவாக
— G. Sundarrajan (@SundarrajanG) November 22, 2021
பூவுலகின் நண்பர்கள் அமைப்பிலிருந்து, “கடந்த 200 ஆண்டுகளில் நான்காவது முறையாக சென்னையில் ஒரு மாத மழைப்பொழிவு 1000mm கடந்துள்ளதாக பிரதீப் ஜான் தெரிவிக்கிறார்.
1918ஆம் ஆண்டிற்குப் பிறகு 2005ல் தான் மீண்டும் 1000mm தொட்டுள்ளது.
ஆனால், கடந்த 20 ஆண்டுகளை எடுத்துக் கொண்டால் 3 முறை இந்த நிகழ்வு நடந்துள்ளது.
தீவிர காலநிலை நிகழ்வுகள் முன்பும் நடந்துள்ளன. ஆனால், அவை நடக்கும் இடைவெளி குறைந்து கொண்டே வருவதுதான் நம்மை அச்சுறுத்துகிறது” என்று பதிவிடப்பட்டுள்ளது.
கடந்த 200 ஆண்டுகளில் நான்காவது முறையாக சென்னையில் ஒரு மாத மழைப்பொழிவு 1000mm கடந்துள்ளதாக @praddy06 தெரிவிக்கிறார்.
— Poovulagin Nanbargal / பூவுலகின் நண்பர்கள் (@poovulagu) November 27, 2021
1918ஆம் ஆண்டிற்குப் பிறகு 2005ல் தான் மீண்டும் 1000mm தொட்டுள்ளது.
ஆனால், கடந்த 20 ஆண்டுகளை எடுத்துக் கொண்டால் 3 முறை இந்த நிகழ்வு நடந்துள்ளது. pic.twitter.com/3mrN9hmPqr
கன்னியாகுமரி மாவட்டத்தில், மேற்குத் தொடர்ச்சி மலைகள் குடையப்படுவது பற்றி ஏற்கனவே கட்டுரை எழுதியிருந்தேன். இதற்கு நாம் தமிழர் கட்சி போராட்டத்தையும் முன்னெடுத்தது. கன்னியாகுமரி மாவட்டத்தைப் பொறுத்தவரையில் மழை சற்று அதிகமாகப் பெய்யும் மாவட்டம்தான். இருந்தாலும், இந்த ஆண்டு மழை நீரை தாக்குபிடிக்கும் கட்டுப்பாட்டை இழந்துள்ளது.
ஒவ்வொரு மாவட்டத்திலும், இயற்கையைச் சேதப்படுத்தும் ஒவ்வொரு விஷயம் அரங்கேறிக்கொண்டேதான் இருக்கிறது. சென்னையை பொறுத்தவரையில், CPCL, Madras Fertilizers Ltd (MFL), தமிழ்நாடு பெட்ரோபிராக்ட்ஸ் லிமிடெட், NTECL வல்லூர் அனல் மின் நிலையம் மற்றும் TANGEDCO வின் வட சென்னை அனல் மின் நிலையம் 50 சதவீதத்திற்கு அதிகமான காற்று மாசு ஏற்படுத்தி வருகின்றனர். அதேபோல், சாம்பல் கழிவு, கொசஸ்தலை ஆற்றை ஆக்கிரமித்தது, உள்ளிட்ட ஏராளமான இயற்கை சார்ந்த விஷயங்களில் TANGEDCO மாற்றி அமைத்து வருகிறது.
இது பற்றி இயற்கை ஆர்வலர் ஒருவர் கூறுகையில், “வடசென்னை மாசு அளவு அதிகரித்துக்கொண்டே செல்கிறது. மக்களிடமும் இது போய்ச் சேரவில்லை. அறைக்கு அனைவரும் இருந்து பேசுவதால் மாற்றங்கள் எதுவும் நிகழப்போவதில்லை” என்று தெரிவித்தார்.
இவை மனிதர்களுக்கு மட்டுமல்ல, இயற்கையிலும் பெரும் ஆபத்தை உருவாக்கிக் கொண்டிருக்கின்றன.
ஒரு பக்கம் கடல்மட்டம் உயர்வு, மறு பக்கம் இயற்கை பேரிடர் இப்படி ஏராளமான பிரச்சனைகள் உருவாகிக் கொண்டே இருக்கிறது.
இவை எல்லாம் ஓரிரு நாட்களில் சரியாகிவிடும் நாம் பழைய நிலைக்குத் திரும்பிவிடலாம் என்று ஏதோ ஒரு குருட்டு நம்பிக்கையில் நம்மால் கடந்துவிட முடியாது. பல காரணங்கள் நம் கண்முன்னே வந்து செல்கிறது. சமீபத்தில், மழை அதிகரித்த பின் தக்காளியின் விலை உயர்வை வைத்து நாம் எளிதில் மீம் போட்டுக் கடந்து செல்லலாம். ஆனால் அதனால் வரும் பின் விளைவுகள் பற்றி சற்று சிந்தித்தே ஆக வேண்டும்.
இது பற்றி தனியார் வனிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் தனது டிவிட்டர் பக்கத்தில், இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தியைச் சுட்டிக்காட்டி, “2020ல் கர்நாடகாவில் சராசரி மழை, கேரளாவில் 26 சதவீத குறைவான மழை, தமிழ்நாட்டில் 6 சதவீத அதிக மழை என்றும்,
2021 தெற்கு கர்நாடகாவில் 151 சதவீத அதிக மழையும், 2021ல் கேரளாவில் 109 அதிக மழையும், தமிழ்நாட்டில் 64 சதவீதம் அதிக மழையும் பதிவாகியுள்ளது” என்றும் குறிப்பிட்டுப் பொருத்தியுள்ளார்.
தொடர் மழை வெள்ளப்பெருக்கால், வீட்டில் சமைப்பது முதல், பெரிய நிறுவனங்களில் இயந்திரங்கள் இயங்குவது வரை எல்லாமே பிரச்சனைக்குரிய விஷயமாகவே மாறி வருகிறது.
மழையால் அதிகம் பாதிக்கப்படும் மாவட்டங்கள்!
தமிழ்நாட்டில் மழையால் அதிகம் பாதிக்கப்படும் மாவட்டங்கள் கடலூர், டெல்டா மாவட்டங்கள், சென்னை ஆகியவை முக்கிய இடத்தை பிடித்தாலும், இந்த ஆண்டு எந்த மாவட்டம் அதிகம் பாதிக்கப்படும் மாவட்டம் என்று தற்போது வரை கணிக்க இயலவில்லை. வழக்கமாகக் கடலோரத்தை ஒட்டியிருக்கும் கடலூர் மாவட்டம் அதிக அளவில் பாதிக்கும்.
சமீபத்திய மழையால் பல இடங்களில் குளங்கள், ஏரிகளில் உடைப்பு ஏற்பட்டுள்ளது. அதில் கன்னியாகுமரி முதல் சென்னை வரை பல இடங்கள் உள்ளன.
ஒரு பக்கம் குளங்கள், ஏரிகள், ஆறுகள் முறையாகத் தூர்வாரப்படாமல் இருக்கும் சூழலில், தண்ணீர் முறையாகத் தேக்கி வைக்கப்படவில்லை என்று குற்றச்சாட்டுகளும் எழுந்துகொண்டே இருக்கிறது. இதுபோன்ற நிலையை மறுக்க முடியாது. 2015-ம் ஆண்டு சென்னையைப் பொறுத்தவரையில் அதி தீவிர மழையை நாம் பார்த்திருந்தோம், அதே சமயம் 2016 ஏப்ரல் மாதத்திலிருந்து குடி நீர் தட்டுப்பாடு பிரச்சனை ஏற்பட்டது. அடுத்தடுத்த ஆண்டுகள் சரிவர மழை பெய்யாத நிலையில், 2019-ம் ஆண்டு மே மாதத்தில் மக்கள் சந்தித்த தண்ணீர் தட்டுப்பாடு என்பது மிகப் பெரிய அளவிலிருந்தது. இந்த முறையும் அந்த நிலை தொடரும் என்பதே பலரது கருத்தாகவும் உள்ளது.
பெய்து தீர்க்கும் இந்த மழையைச் சேமித்து வைக்கவும், நிலத்தடியில் தக்க வைக்கவும், அதிகாரிகள் முறையாக வேலை செய்யாமல் இருப்பதாகவே மக்கள் கருதுகின்றனர். எனவே அடுத்த சில ஆண்டுகள் மழை பெய்யாது, தண்ணீர் பஞ்சம் ஏற்படும் என்ற கருத்தை மக்கள் முன்வைக்கிறார்கள்.
பூவுலகின் நண்பர்கள் அமைப்பை சுந்தர்ராஜன் கூறுகையில், “பேரிடர்கள் வருங்காலங்களில் அதிகரிக்கும். கடந்த 2015-ம் ஆண்டுக்குப் பின் தற்போது மீண்டும் பெரும் வெள்ளம் ஏற்படுகிறது. எனவே அடுத்தடுத்த ஆண்டுகளில் இந்த பேரிடர் நடக்கும் கால இடைவெளி குறைந்து கொண்டே போகும்” என்று தெரிவித்தார்.
திருமுருகன் காந்தி சென்னை வெள்ளமும் நம் படிப்பினையும் என்ற தலைப்பில் பேசுகையில், “ஆறு விரியக் கூடிய இடத்தில் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. அவற்றை அகற்றினால், வெள்ளம் எளிதில் வெளியேறிவிடும். எங்கெங்கும் கார்பரேட் நிறுவனங்களின் ஆக்கிரமிப்பு இருக்கிறதோ, அங்கு எல்லாம் ஆறு சுருங்கி வெள்ளம் வெளியேற வழியில்லாமல் போயுள்ளது.
பொதுப் பணித்துறை, பெரிய பெரிய நிறுவனங்கள் ஆக்கிரமித்திருப்பதைக் கண்டுகொள்ளாமல், சிறிய குடிசைகள் ஆக்கிரமித்துள்ளதாகப் பட்டியலிட்டு அவற்றை அகற்ற வழி செய்வார்கள். இது வெறும் கண்துடைப்பு, எனவேதான் பிரச்சனை என்று வருகையில் தீர்ப்பதற்கு முடியாமல் போகிறது.
சொந்த நிலத்தில் வீடு கட்டும் நபர், அந்த நிலத்தின் ஒரு அடி கூட விடாமல் அனைத்து பகுதிகளையும் கட்டிடமாக மாற்றம் செய்ய முற்படுகிறார்கள். மிகப்பெரிய அப்பார்ட்மென்டில் தரைப் பகுதியே தெரியாத அளவில், சிமெண்ட் போட்டு அடைக்கப்படுகிறது. இப்படியான இவை எல்லாம் பிரச்சனையாகவே முடிகிறது.
சென்னை அதிக அளவில் மழை பொழியும் இடம். வளைகுடா பகுதியில், அதிக அளவில் புயல் ஏற்படும் வாய்ப்புள்ளது. அதை தெரிந்தும், முறையாக வழி ஏற்படுத்தப்படவில்லை. அதேபோல் பெரும்பாலான நீர் நிலையங்களும் முற்றிலும் அழிக்கப்பட்டுள்ளது. அவ்வாறுதான் தற்போது வெள்ளப்பெருக்கு ஏற்படுகிறது” என்று சுட்டிக்காட்டுகிறார்.
அதேபோல் தான் பிற மாவட்டங்களில் பல மாற்றங்கள் அவசர அவசரமாகச் செய்யும் அரசு அதன் பின்விளைவுகளைப் பற்றிச் சிந்திக்காமல் இருக்கிறது. இவை கால நிலை மாற்றத்திற்கு மட்டுமல்ல, அந்த மாற்றத்தினால் ஏற்படும் பின் விளைவுகளிலிருந்தும் கூட தப்பிக்க முடியாதவாறு உருவெடுக்கிறது.
விரிவாக்கப்படும் சென்னை நகரம் பலனளிக்குமா?
சென்னைப் பெருநகர எல்லை விரிவாக்கம் திட்டமிடப்பட்டுள்ளது. தற்போதைய, சென்னை பெருநகரப் பகுதி 1975-ஆம் ஆண்டு 1,189 ச.கி.மீ பரப்பளவில் வரையறுக்கப்பட்டது. இதில் தற்போது பெருநகர சென்னை மாநகராட்சி, ஆவடி மாநகராட்சி, தாம்பரம் மாநகராட்சி, 2 நகராட்சிகள், 6 பேரூராட்சிகள் 10 ஊராட்சி ஒன்றியங்களைக் கொண்டுள்ளது.
இவற்றை விரிவாக்கம் செய்ய அரசு திட்டமிட்டுள்ளது. சென்னையைச் சுற்றியுள்ள வளர்ச்சி, வேகமாக இருப்பது முக்கிய காரணமாகக் கூறப்படுகிறது.
சென்னை நகரில் கடும் வெள்ளபெருக்கு தொடர் கதையாகும் நிலையில், சென்னையை விரிவாக்கம் செய்ய அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. “சென்னையின் நகர விரிவாக்கம் என்பது, மக்கள் குடியேற்றத்தை பொறுத்து அமைந்துள்ளது. 1991-ம் ஆண்டு முதல் 2016-ம் ஆண்டு வரை சென்னைக்கு 5 மில்லியன் மக்கள் குடியேற்றம் அடைந்துள்ளனர். அதன்படி 380 சதுர கி.மீ நகரம் தன்வசமாக்கியுள்ளது. இந்த அளவுக்கு நிலம் தேவையா? என்பதுதான் முக்கிய கேள்வி. சென்னை மாநகராட்சியின் அளவீடு என்பது, கிட்டத்தட்ட 420 சதுர கி.மீ. அதையும் தாண்டி சென்னையில் பல சதுர கி.மீகள் இணைந்துள்ளன. சென்னையில் 1 சது.மீக்கு 25 ஆயிரம் பேர் இருக்கிறார்கள்” என்று cept பல்கலைகளகத்தின் இயக்குநர் டாக்டர் ஸ்ரீவத்தசன் தெரிவிக்கிறார்.
தற்போதைய சூழலில், சென்னை நகரை விரிவாக்குவது என்பது பெரும் பிரச்சனைக்குரிய விஷயமாகவே மாறிவிடும். தற்போதே சென்னையில் பல பகுதிகளில் இந்த கட்டுரை எழுதிக்கொண்டிருக்கும் இந்த வேளையிலும், மழைநீர் தேங்கி நிற்கிறது. இப்படிபட்ட சூழலில் நகரை விரிவாக்கம் செய்வது என்பது மேலும், ஆபத்தை அதிகரிக்கலாம்.

Related Stories
அச்சமூட்டும் கனமழை - சென்னையில் மீண்டும் வெள்ளம் வருமா?
'தென்மேற்கு பருவ மழையை அறிவித்தவர் பெயர் காகம்' சரியாகக் கணித்த வானிலை ஆய்வாளர்கள்!
'கல்யாண மண்டபத்த புக் பண்ணு, மக்களுக்கு பிரியாணி பொட்டலம் கொடு' என்பதுதான் மழை நீர் மேலாண்மை!
எந்தெந்த பகுதிகளில் மழை? சென்னையின் நிலவரம்?