பவளப் பாறைகளை வைத்து ஏமாற்று வேலை? 50 வருடங்களில் அழியும் நிலையில்... விஞ்ஞானியின் எச்சரிக்கை
“என்னுடைய நண்பர் ஒருவர் வன விலங்கு பாதுகாப்பு அதிகாரியாக இருந்தபோது பவளப் பாறைகளை எடுக்கும் நபர்களை அவர் பிடித்துவிட்டார். உடனே அந்த நிறுவனத்தினர் நண்பர் மீது வழக்கு தொடர்ந்தனர். மிகவும் பாதுகாக்கப்பட்ட விலங்குகள் பட்டியலில் பவளப் பாறைகள் இருந்தாலும் கூட என் நண்பர் அந்த வழக்கில் தோல்வியடைந்தார். காரணம், நீதிபதிக்குப் பவளப் பாறைகள், பவள விலங்குகள் பற்றி எதுவும் தெரியவில்லை” என்கிறார் விஞ்ஞானி சத்யநாராயணன்
“ராமேஸ்வரம் பகுதியை சேர்ந்த கோயில் ஒன்றிலிருந்து சில புனித கற்கள் அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்டது” என்ற வாட்ஸ்ஆப் பதிவைப் பார்த்தேன். புனித கற்கள் என்று குறிப்பிடும் கல், கடலிலிருந்து எடுக்கப்பட்டதாகவும், கடந்த 50 வருடங்களாக அவர்கள் அதை பாதுகாத்து வருவதாகவும், அந்த கல்லை கோயிலில் இருந்து அகற்றினால் புனித தன்மை போய்விடும் என்றும் தலைமை வன விலங்கு அதிகாரிக்கு கடிதம் மூலம் தெரிவித்துள்ளனர். அந்த கடிதம் 03.12.2019 தேதியில் அனுப்பப்பட்டதாகத் தெரிகிறது.

அந்த கடிதத்தில், “பல தலைமுறைகளாக பூஜித்து வரும் புராதான கற்கள் புகழ் பெற்றது மற்றும் பழமையானதாகும். நீண்ட நாட்களாக 29 கற்களையும் சனாதான முறைபடி பூஜித்து வருகிறோம். இதை கோயிலில் இருந்து அகற்ற நேரிட்டால் புனித தன்மை போய்விடும். பக்தர்களின் வழிபாடு முறையும் மாறிவிடும். இதனால் திருதலத்திற்கு வரும் பக்தர்கள் மனநிறைவின்றி திரும்பி செல்ல நேரிடும். அனுமதி கோரி நாங்கள் அனுப்பிய கடிதம் இன்றுவரை நிலுவையில் உள்ளது” என்று கோயிலின் நிர்வாகிகள் குறிப்பிட்டுள்ளனர்.

செய்தி பழையதாக இருந்தாலும், சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் கடல் தினம் ஆகியவற்றை முன்னிட்டு மக்களின் நம்பிக்கையினால் செய்யும் இதுபோன்ற விஷயங்களால் பேரிடர் ஏற்படும் சூழல் இருக்கிறது என்பதை நான் விரிவாகக் கூற நினைக்கிறேன். அதேபோல் அவர்களைச் சிறைக்கு அனுப்பும் அளவும் இங்குச் சட்டங்கள் எதிராக இருக்கின்றன.
சாமி என்று கிராம மக்கள் வைத்திருக்கும் கற்கள் பவளப் பாறைகள் என்றும், அவற்றை எடுத்து இதுபோன்ற பல வேலைகளில் ஈடுபட்டு வருவதாகவும் வனவிலங்கு ஆர்வலர் சந்திரசேகர் குறிப்பிடுகிறது. மேலும், “பவளப் பாறைகளின் துண்டுகள் தூத்துக்குடி, ராமேஸ்வரம் உள்ளிட்ட கடலை நம்பி வாழும் மக்கள் பலரும் எடுத்து வைத்துள்ளனர். வீடுகளில் மீன் வளர்க்கும் தொட்டிகள் செய்யப் பவளப் பாறைகள் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதுபோன்று ஒவ்வொருவரும் பவளப் பாறைகளை எடுத்துச் செல்வது கடல் வாழ் உயிரினங்களை அழிவை நோக்கித் தள்ளும். ” என்று தெரிவித்திருந்தார்.
இவர்கள் வைத்திருப்பது பவள காலணி கற்கள். இதில் இருக்கும் ஒவ்வொரு சிறிய ஓட்டைகளிலும், பவள விலங்குகள் இருக்கும். அவை சுண்ணாம்பை உற்பத்தி செய்துகொண்டே இருக்கும். நாம் பார்க்கும் கல் அதன் எலும்புக்கூடு. தற்போது சுண்ணாம்புக் கல்லாக இருக்கிறது. இது எடுத்துச் செல்வது சட்டப்படி குற்றமாகும். இவ்வாறு ஒவ்வொருவரும் தங்கள் தேவைகளுக்கும், நம்பிக்கைகளுக்கும் எடுத்துச்சென்றால் பவளப் பாறைகளை முற்றிலும் இழக்க வேண்டியிருக்கும். இவர்களைச் சிறையில் அடைக்காமலிருந்தால் சரி. அரசு சட்டம் பிறப்பிப்பதற்கு முன் ஒருவர் பவளப் பாறையை வீட்டில் எடுத்து வைத்திருந்தால் அது பற்றி கடிதம் மூலம் அரசிடம் தெரிவித்திருக்க வேண்டும் - விஞ்ஞானி சத்யநாராயணன்
தனுஷ்கோடிக்குச் செல்லும் வழியில் அமைந்துள்ள கோதண்டராமர் கோயிலுக்கு வரும் வடமாநில பக்தர்களிடம் சில கற்களைக் கொடுத்து வசூலிக்கும் வழக்கம் இருக்கிறது. இந்த கற்கள் பவளப் பாறைகளின் வகையைச் சேர்ந்தது என்றும், 50 ரூபாய்க்குப் பக்தர்களை ஏமாற்றி விற்று பணம் பார்ப்பதாகவும் விகடன் இணையதளத்தில் 2020-ம் ஆண்டு பிப்ரவரியில் வெளியான செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதேபோல் புதிய பாம்பன் பால கட்டுமான பணிகளில் பவளப் பாறைகள் உடைக்கப்படுவதாகவும், ராமர் கோயில் கட்டுவதற்குப் பவளப் பாறைகள் ராமேஸ்வரத்திலிருந்து எடுத்துச் செல்லப்படுவதாகவும் அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
1986 கடலோர ஒழுங்குமுறை சட்டவிதிகளின்படி பவளப் பாறைகளை யாரும் கையகப்படுத்த உரிமையில்லை. சட்டப்படி பவளப் பாறைகள் மிகவும் பாதுகாக்கப்பட்ட வனவிலங்குகள் பட்டியலில் இடம்பிடித்துள்ளது. மிகவும் பாதுகாக்கப்பட்ட வனவிலங்குகளைக் கொலை செய்பவர்கள் மற்றும் அதை வளர்ப்பவர்களுக்கும் கடும் தண்டனை விதிக்க சட்டத்தில் இடம் உள்ளது.
“தமிழகத்தில் பவளப் பாறைகள் சிமெண்ட் உற்பத்திக்குப் பயன்படுத்தப்பட்டது. ஒருமுறை வழங்கிய உரிமத்தை கொண்டு பல காலம் அதை பயன்படுத்தி வந்தனர். என்னுடைய நண்பர் ஒருவர் வன விலங்கு பாதுகாப்பு அதிகாரியாக இருந்தபோது பவளப் பாறைகளை எடுக்கும் நபர்களை பிடித்துவிட்டார். உடனே அந்த நிறுவனத்தினர் நண்பர் மீது வழக்கு தொடர்ந்தனர். மிகவும் பாதுகாக்கப்பட்ட விலங்குகள் பட்டியலில் பவளப் பாறைகள் இருந்தாலும் கூட என் நண்பர் அந்த வழக்கில் தோல்வியடைந்தார். காரணம், நீதிபதிக்குப் பவளப் பாறைகள், பவள விலங்குகள் பற்றி எதுவும் தெரியவில்லை” என்கிறார் விஞ்ஞானி சத்ய நாராயணன்.
கடந்த சில காலமாக நாம் பவளப் பாறைகள் பற்றிப் பேசி வந்தாலும் கூட, இன்னமும் போதிய விழிப்புணர்வு இல்லாமல் அரசும், மக்களும் இருக்கிறார்கள். அதைப் பற்றிய விரிவான தகவல்களை இங்கு நான் குறிப்பிட விரும்புகிறேன்.
கோரல் ரீஃப் (பவளப் பாறைகள்) என்றால் என்ன?
பவளப் பாறைகள் பற்றி ஆய்வு செய்யும் விஞ்ஞானி சவுடுலா சத்யநாராயணன் அவர்களிடம் கேட்டறிந்த விஷயங்களையும், நான் படித்த தகவல்களையும் தான் இங்கு உங்களுடன் பகிர்ந்துகொள்கிறேன்.
பவளப் பாறைகள் என்பது கடலுக்கு அடியில் இருக்கும் ஒரு பாதுகாப்பு அரண். இது பவள விலங்கு எனப்படும் விலங்கினத்தினால் உற்பத்தி செய்யப்படுகிறது. ஒரு பவள உயிரியை பாலிப் (Polyp) என்று குறிப்பிடுகின்றனர். மிகச் சிறிய அளவிலேயே காணப்படும் பாலிப் உயிரிகள் கடல் வாழ் தாவரங்களிடம் தஞ்சம் அடைகிறது. அந்த தாவரங்களுடன் இணைந்து இருந்தால் மற்ற உயிரிகளிடம் இருந்து பவள விலங்குகள் எளிதில் தப்பித்துவிடலாம்.

எனவே பவள உயிர்களுக்குத் தஞ்சம் அடைய இடம் கொடுக்கும் தாவரங்கள், அவற்றின் கழிவுகளை உணவாக எடுத்துக்கொள்கின்றன. அதேபோல் தாவரங்கள் ஒளிச்சேர்க்கை மூலம் தயாரிக்கும் 80 சதவீத உணவைப் பவள விலங்குகள் உணவாக்கிக்கொள்கிறது. இவ்வாறு ஒன்றை ஒன்று ஆதரவு கொடுத்து வாழ்கின்றன. 'இது தான் உலகின் முதல் காதல்' என்று விஞ்ஞானி சத்யநாராயணன் குறிப்பிடுகிறார்.
இவ்வாறு பாதுகாக்கப்பட்ட இடங்களிலிருந்து கொண்டு பவள விலங்குகள் கால்சியம் கார்பனேட் சுண்ணாம்பை உற்பத்தி செய்கிறன. இந்த சுண்ணாம்பு படிவங்கள் ஒன்று சேர்ந்து காலணியாகவும், அது பவளப் பாறைகளாக உருவாகும். மிகப்பெரிய பவளப்பாறைகள் ஆண்டுக்கு 0.3 முதல் 2 சென்டிமீட்டர் வரை வளரும் என்று oceanservice தளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதேபோல் பவளப் பாறைகள் கிட்டத்தட்ட 250 மில்லியன் ஆண்டுகளுக்கு முன் உருவானதாக விஞ்ஞானி சத்யநாராயணன் அவர்களும், சில கடல் வாழ் உயிரினங்கள் பற்றிய ஆய்வுகளும் குறிப்பிடுகின்றன.
வகைகள் மற்றும் இனப்பெருக்கம்
பவளப் பாறைகளில் மூன்று வகைகள் உள்ளன. பிரிகிங் (fringing), பேரியர் (barrier), மற்றும் அட்டோல் (atoll) எனப்படுகிறது. பாலிப் எனப்படும் சிறிய பவள விலங்கு 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வகைகள் உள்ளது. இதில் 1500 வகை கால்சியம் கார்பனேட் சுண்ணாம்பை உருவாக்குவதாகவும், மற்ற 1500க்கும் மேற்பட்டவை சாதாரண உயிரிகளாகவும் வாழ்கின்றன. அவை சுண்ணாம்பு உற்பத்தி செய்வதில்லை. இவை கடலில் பல ஆயிரம் அடிக்குக் கீழ் வாழ்கின்றது என்று விஞ்ஞானி சத்யநாராயணன் கூறினார்.

இனப்பெருக்கம் என்பது பௌர்ணமி தினத்தில் அனைத்து பவள விலங்குகளும் ஒரே நேரத்தில் விந்தணுவையும், எச்சத்தையும் வெளியிடும். அது நீர்மட்டத்திற்கு மேல் வந்து இணைந்து லார்வாவாக மாறுகிறது. அந்த லார்வாக்கள் சுண்ணாம்பு பாறைகளில் சென்று சேர்ந்து ஒன்று இரண்டாகவும், இரண்டு நான்காகவும், நான்கு எட்டாகவும் பிரியும். அவை அவ்வாறே கால்சியம் கார்பனேட் சுண்ணாம்பையும் வெளியிடும். இந்த முறைக்கு ஹெர்மாஃப்ரோடைட் (hermaphrodite) என்று குறிப்பிடுகின்றனர்.
பவளப்பாறைகளின் பயன்கள்?
பவளப் பாறைகள் பல வகைகளில் பயன்படுகின்றன. 2004-ம் ஆண்டில் ஏற்பட்ட சுனாமியின் போது, ராமேஸ்வரம் தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில், சேதாரம் குறைவாக இருந்தது. இதற்கு முக்கிய காரணம் பவளப் பாறைகள்தான் என்கிறார் விஞ்ஞானி சத்யநாராயணன். இது போன்று தற்போது இருக்கும் பல தீவுகள் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பல மணல் மேற்பரப்புகள் பவளப் பாறைகளால் உருவாக்கப்பட்டதுதான்.

மேலும், மீன்கள் இனப்பெருக்கம் செய்யவும், உணவுகளைத் தேடவும் பவளப் பாறைகளின் அருகில் அதிகம் குடிகொள்கின்றன. இந்திய சுற்றுலாவில் பவளப் பாறைகளின் பங்கு மிகப்பெரியது என்று அவர் தெரிவித்தார். உலகில் உள்ள மொத்த கடற்பரப்பில் 1 சதவீதம் மட்டுமே பவளப் பாறைகள் உள்ளன. இந்த பகுதியில்தான் உலகில் பிடிக்கப்படும் 25 சதவீதமான மீன்கள் வாழ்கின்றன.
தற்போதைய நிலையும் அழிவும்
50 ஆண்டுகளில் பவளப் பாறைகள் முற்றிலும் அழிந்துவிடும் என்கிறார்கள் ஆய்வாளர்கள். அதற்கு 'நீங்கள் தான் காரணம்' என்கிறார் விஞ்ஞானி. உலக வெப்ப மயமாதல் காரணமாகப் பவளப் பாறைகளை உருவாக்கும், பவள விலங்குகள் விரைவில் அழிந்துவிடுகின்றன. எனவே பவளப் பாறைகளும் விரைவில் அழிவு நிலையை நோக்கிச் சென்றுகொண்டிருக்கிறது.
உலக வெப்பமயமாதலால், கடல் தாவரங்களில் இருக்கும் பவள விலங்கை, அவை வெளியில் தள்ளுகின்றன. அவ்வாறு தள்ளப்பட்ட உயிரினம் விரைவில் இறந்துவிடும். எனவே சுண்ணாம்பு படிவங்கள் உருவாகாது. அதேபோல் பவள உயிரிகள் கற்கள் வடிவத்தில் காலணியாக உருவாகியிருக்கும். அவை இறந்துவிட்டால் அவை வெறும் கற்களாகவே தோன்றும். சிறிய கற்களிலும் ஆயிரக்கணக்கான பவள உயிரிகள் வாழ்ந்திருக்கும். ஒருவேளை அவை இறந்திருந்தாலும், அடுத்து உருவாகும் பவள விலங்குகளுக்கு அதன் சுண்ணாம்பு படிவங்கள் உதவியாக இருக்கும்.
இதுபோன்ற கற்களைப் பலரும் வீடுகளில் வைத்துக்கொள்கின்றனர். பலர் நம்பிக்கைகள் அடிப்படையிலும், சிலர் அபூர்வ பொருட்களாகவும் வைத்துக்கொள்கின்றனர். உண்மையில் இதை வீட்டில் வைத்திருக்கவோ, கடலில்லிருந்து எடுக்கவோ அனுமதியில்லை.
இந்தியாவைப் பொறுத்தவரையில் மன்னார் வளைகுடா பகுதி, கட்சத் தீவு, அந்தமான் நிகோபார் தீவு, இலட்சத்தீவு பகுதி ஆகிய இடங்களில் அதிக அளவில் பவளப் பாறைகள் காணப்படுகிறது. இது தவிர மகாராஷ்டிரா, கேரள மாநிலம் விழிஞ்ஞம் உள்ளிட்ட பகுதிகளிலும் சிறிய அளவில் காணப்படுகிறது.

பூமத்தியரேகையில் இரண்டு பக்கமும் காணப்படும் இந்த பவளப் பாறைகள் சூரிய ஒளியால் மட்டுமே வளர முடியும். குளிர்ந்த நீர் பகுதிகளில் வளருவதில்லை.
உலகத்தில் தற்போது 100 நாடுகளில் பவளப் பாறைகள் இருப்பதாகக் கூறப்படும் நிலையில், ஆஸ்திரேலியாவில்தான் மிகப்பெரிய பவளப் பாறைகள் இருக்கின்றன. அந்நாட்டு அரசு பவளப் பாறைகளைக் காப்பாற்றும் நோக்கில் பல முன்னெடுப்புகளைச் செய்து வருகிறது. பவளப் பாறைகள் பாதிக்கப்படும் போது வெள்ளை நிறத்தில் (coral bleaching) மாற்றம் அடைந்து பவள விலங்குகள் இறந்துவிடுகின்றன. முதல் முதலில் 1998-ம் ஆண்டு coral bleaching நிகழ்ந்தது. அதே வருடத்தில் உலகில் உள்ள 50 முதல் 80 சதவீதம் வரையிலான பவள விலங்குகள் இறந்துவிட்டன என்கிறார் விஞ்ஞானி.
அதன்பின் தொடர்ச்சியாக 2005, 2010, 2017 ஆகிய ஆண்டுகளிலும் coral bleaching நிகழ்ந்தது. 2017-ஆம் ஆண்டில் உலக வெப்ப மயமாதல்தான் இதற்குக் காரணம் என்று பலரும் தெரிவித்ததை நீங்கள் கேள்விப்பட்டிருப்பீர்கள்.

பவளப்பாறைகள் அதிக அளவிலிருந்தால் மீன்களின் இனப்பெருக்கம் அதிகரிக்கும் என்பதை மேலே குறிப்பிட்டிருந்தேன். மற்றொருவகையில் மீன்களின் உற்பத்தி அதிகரிக்கும் போது, மனித தாக்குதல்கள் நிகழ்வதால் பவளப் பாறைகள் அழிவைச் சந்திக்க நேரிடுகிறது. காரணம், மீனவர்கள் பவளப் பாறைகள் இருக்கும் இடங்களில் அதிக அளவில் மீன் இருக்கும் என்று நினைத்து வலையை வீசுகின்றன. அதில் பாறைகள் மீதும் மோதல்கள் நிகழும். அத்துடன், இயந்திர படகுகள், கப்பல்கள் போன்றவற்றாலும் பவளப் பாறைகள் வளர்ச்சி தடைப்படுகிறதாம்.
பவளப் பாறைகளை காக்க என்ன செய்யப்படுகிறது?
விஞ்ஞானி சத்யநாராயணன் தலைமையிலான குழு, தமிழகத்தின் மன்னார் வளைகுடா பகுதியிலிருந்து அழிந்துபோன பவளப் பாறை இனத்தை எடுத்து வளர்க்கும் பணிகளை மேற்கொண்டுள்ளனர். இந்திய விலங்கியல் ஆய்வகம் சார்பாக இந்த பணிகள் செய்யப்பட்டு வருகிறது. இந்த பணிகளை பயோராக்ஸ் (Biorocks) என்று குறிப்பிடுகின்றனர்.

கடலின் உட்பகுதியில், எஃகு கொண்டு உருவாக்கப்பட்ட கட்டமைப்பில் 12 வாட் மின்சாரம் மற்றும் சூரிய ஒளி பேனல் பொருத்தப்பட்டு அமைக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் சாதாரணமான பவளப் பாறைகள் வளரும் வேகத்தைவிட இந்த முறையில் வேகமாக வளர்கின்றன என்று இதைச் செயல்படுத்திவரும் விஞ்ஞானி சத்யநாராயணன் தெரிவித்தார்.
நாமும் நம்மால் முடிந்தவரை, இயற்கை பேரிடரைத் தடுக்கும் பவளப் பாறைகள் அழியாமல் இருக்க முயற்சிகள் செய்வோம்.

Related Stories
'ஒரு சிறிய தீவில் மூன்று துறைமுகங்கள்.' அதானியின் முகம் கோணாமல் பார்க்கிறதா அரசு?
'மாணவர்களின் போராட்டத்தை மறைக்கப் பணம் கொடுத்தனர்' ஆசிரியர் மகாலட்சுமி Exclusive பேட்டி!
கொடைக்கானல் மலை பூண்டு: “இந்த வெள்ளைப் பூண்டுதான் எங்களைக் கடனில் தள்ளும் பயிர்”
தொடர் கதையாகும் யானைகள் அழிவு! கலங்க வைக்கும் யானைகளின் வாழ்க்கை