ஆன்லைன் விளையாட்டின் விபரீதம்! Behavioral addiction-க்கு தீர்வு காண்பது யார் பொறுப்பு?
“ஒரு சிகரெட்டை 'உலகத்திலேயே அதிக அளவு addiction தரக்கூடிய' பொருளாக விளம்பரப்படுத்த முடியாது. ஆனால், ஒரு ஆன்லைன் கேமை 'உலகத்திலேயே அதிக அளவு addiction தரக்கூடிய விளையாட்டு' என்று விளம்பரப்படுத்த முடியும்” என்று குறிப்பிடுகிறார், ஒரு மனநல மருத்துவர்.
டிஜிட்டல் இந்தியா, டிஜிட்டல் பரிவர்த்தனை, ஆன்லைன் கல்வி என்று எந்த துறையைச் சுற்றிப் பார்த்தாலும், எட்டா தொலைவில் இருக்கும் ஒரு விஷயத்தை ஆன்லைன் மூலம் தேடி ஓடும் நிலை உருவாகிக்கொண்டே இருக்கிறது. ஆன்லைன் தொடர்பான வசதிகள் அதிகரிக்க, அதிகரிக்க அது தொடர்பான பிரச்சனைகளும் அதிகரிக்கிறது. இன்று நீங்கள் ஒரு சமூக வலைத்தளத்தில் இணைகிறீர்கள் என்றால், அதன் மீது நீங்கள் காட்டும் ஈடுபாடு ஒரு கட்டத்தில், அடிமையாக்கிவிடுகிறது. இதற்குப் பல எடுத்துக்காட்டுகளை நாம் சொல்ல முடியும்.
இன்ஸ்டாகிராமில் Reels என்றும், யூடியூபில் shorts என்று குறும் வீடியோக்களை பார்க்கத் துவங்குபவர்கள், அடுக்கடுக்காக வீடியோக்களை பார்க்கும் மனநிலைக்கு ஆளாகிவிடுகின்றனர். அத்தகைய ஆர்வத்தைத் தூண்டும் வகையில், வீடியோக்கள் விரைவாகக் கண்களின் முன் கடக்கின்றன. இவை சமூக வலைத்தளங்களில், நேரத்தைக் கடந்தும் வழியாக அமைந்துள்ளது என்றால், ஆன்லைன் விளையாட்டுகள் பணத்தை இழக்கும் சூழலுக்கும், மனதளவில் விரக்தியை ஏற்படுத்தும் வகையிலும் வடிவமைக்கப்பட்டுள்ளது. சில காலங்கள், ஆன்லைன் விளையாட்டுகளுக்குத் தடை விதிக்கப்பட்டிருந்தாலும், மீண்டும் அனுமதி கொடுக்கப்பட்டுப் பல விபரீதங்களை ஏற்படுத்திவிட்டது.
ஆன்லைன் விளையாட்டுகள்?
ஆன்லைன் விளையாட்டுகள் பற்றி சர்ச்சைகள் ஏற்படும் போது மட்டும் பேசிவிட்டு ஓய்வெடுக்கிறோம். வளரிளம் பருவத்தினர், இதற்கு அடிமையாகுவதைப் போன்று, பெரியவர்களும் எளிதில் பணம் சம்பாதிக்கும் முறையாக ஆன்லைன் விளையாட்டுகளைத் தெரிவு செய்து அடிமையாகிவிடுகின்றனர்.
ஒரு வருடங்களுக்கு முன், கோவையைச் சேர்ந்த தனியார் வங்கி ஊழியர் ஒருவர் ஆன்லைன் விளையாட்டுக்கு அடிமையாகித் தொடர் தோல்விகளைச் சந்தித்ததால், தற்கொலை செய்து கொண்டார். அதேபோலவே வேறு சில சம்பவங்களும் தமிழ்நாட்டில் அரங்கேறியது. எனவே கடந்த அதிமுக அரசு ஆன்லைன் விளையாட்டுக்குத் தடை விதித்து சட்டம் இயற்றியது. அச்சட்டத்திற்கு, அப்போதைய தமிழ்நாடு ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தும் ஒப்புதல் அளித்திருந்தார்.
சட்டத்தை மீறி ஆன்லைன் விளையாட்டில் ஈடுபடுபவர்களுக்கு 5 ஆயிரம் அபராதமும், 6 மாத சிறைத் தண்டனையும், ரம்மி போன்ற விளையாட்டுகளை நடத்தும் நிறுவன பொறுப்பாளர்களுக்கு 2 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், 10 ஆயிரம் அபராதமும் விதித்து 2020 நவம்பர் 21-ம் தேதி அரசு சட்டம் இயற்றியது.
சட்டத்தை நீக்கக் கோரி, ஜங்லி கோம்ஸ், ப்ளே கேம்ஸ், ரீட் டிஜிட்டல்ஸ் நிறுவனங்கள் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், இருதரப்பு வாதங்களையும் கேட்டறிந்தபின் ஆன்லையின் விளையாட்டுகள் மீதான தடையை ரத்து செய்து உத்தரவிட்டார். அத்துடன் ஆன்லைன் விளையாட்டுகளை ஒட்டுமொத்தமாகத் தடை செய்ய முடியாது எனவும், புதிய சட்டம் கொண்டுவரத் தமிழ்நாடு அரசுக்குத் தடை இல்லை எனவும் நீதிபதிகள் குறிப்பிட்டனர். நீதிமன்றத்தின் தீர்ப்பின் போது ஆட்சி பொறுப்பேற்றிருந்த திமுக அரசு, குறிப்பிடுகையில், ஆன்லைன் ரம்மியை மீண்டும் தடை செய்யும் வகையில் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று தெரிவித்திருந்தது. ஆனால், அது பற்றிய விவரங்கள் எதுவும் பின்னர் வெளியாகவில்லை.
நீதிமன்றத்தில் வழக்கு விசாரணையிலிருந்தபோதே ஆன்லைன் விளையாட்டின் பிரச்சனை ஒன்று வெடித்தது. "TOXIC MADAN" என்ற பெயரில், நபர் ஒருவர், ஆன்லைன் விளையாட்டின் மூலம் கெட்ட வார்த்தைகளைப் பேசி வந்தார். அவர், அந்த வீடியோக்களை யூடியூபில் பதிவேற்றிய நிலையில், அது வைரலாகி பிரச்சனை வெடித்தது. இதனை அடுத்து மதன் கைது செய்யப்பட்டு, குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டார்.
அதேபோல், ஆன்லைன் விளையாட்டுகளுக்கு விளம்பரம் செய்த இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட்கோலி, நடிகை தமனா உள்ளிட்டோரிடம் அரசு பல கேள்விகளை எழுப்பியதுடன், கடும் விமர்சனத்தையும் முன்வைத்தது.
இவை எல்லாம் கடந்து ஆன்லைன் விளையாட்டு தற்போது ஒரு குடும்பத்தையே பலிவாங்கிய சம்பவம் மிகப்பெரிய அளவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை பெருங்குடி பகுதியைச் சேர்ந்த மணிகண்டன் என்ற தனியார் வங்கி ஊழியர், ஆன்லைன் விளையாட்டிற்கு அடிமையாகி, பணத்தை இழந்துள்ளார். அதன் மூலம், அவருக்குக் கடன் சுமை அதிகரித்துள்ளது. எனவே மனைவி குழந்தைகளைக் கொலை செய்துவிட்டு தற்கொலை செய்துகொண்டார்.
#BREAKING | கடன் தொல்லையால் வங்கி அதிகாரி தற்கொலை!#SunNews | #Suicide | #Chennai | #OnlineGame pic.twitter.com/XS1uwLBlPN
— Sun News (@sunnewstamil) January 2, 2022
ஆன்லைன் விளையாட்டுகளின் விபரீதங்கள் பற்றி மனநல மருத்துவர் சிவபாலன் இளங்கோவன் கூறுகையில், “வழக்கமாக நாம் அடிமைத்தனம் என்பது சிகரெட் பிடித்தல், மது அருந்துதல் போன்றவற்றையே பார்த்திருப்போம். ஆனால், இந்த Behavioural addiction என்பது அதற்கு மேற்பட்டதாக இருக்கிறது.
இந்த டிஜிட்டல் கேம்கள் தயாரிக்கும் நிறுவனங்கள், அந்த கேமை தயாரிக்கும் அணியில் ஒரு உளவியலாளரையும் பணியமர்த்துகின்றனர். அவர்கள், இளைஞர்களை அதிக அளவில் விளையாட வைப்பதற்கான வழிகளை வடிவமைப்பாளர்களுக்குக் கூறுகின்றனர். அதன்படி, அந்த கேம் வடிவமைக்கப்படுகிறது.
ஒரு சிகரெட்டை 'உலகத்திலேயே அதிக அளவு addiction தரக்கூடிய' பொருளாக விளம்பரப்படுத்த முடியாது. ஆனால், ஒரு ஆன்லைன் கேமை 'உலகத்திலேயே அதிக அளவு addiction தரக்கூடிய விளையாட்டு' என்று விளம்பரப்படுத்த முடியும். ஆன்லைன் கேம்கள் இளைஞர்களைக் குறிவைக்கும் விளையாட்டாக உள்ளது. இளைஞர்களை அடிமைப்படுத்தும் நுட்பங்களுடனும் இந்த கேம் தயாரிக்கப்படுகிறது" என்று குறிப்பிட்டார்.
ஆன்லைன் விளையாட்டுகளுக்கு எல்லை வந்துவிடுமா? என்றால், இன்னும் புதிய பரிமாணங்களில் அது உருவெடுத்துக்கொண்டே தான் இருக்கும் என்பதே உண்மை. அதற்கும் ஒரு முக்கிய எடுத்துக்காட்டு ஒன்றைச் சொல்ல வேண்டும். தற்போது Axie Infinity என்ற பெயரில் விளையாட்டு ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. இந்த விளையாட்டில் ஈடுபடும் நபருக்கு கிரிப்டோ கரன்சி மூலம் பணம் சம்பளத் தொகை போன்று, ஒரு தொகை வழங்கப்படுகிறது. இது உண்மையில், சரியான நடைமுறையில் உள்ளதா என்பதை உறுதிப்படுத்த முடியவில்லை. ஆனால், இந்தியா உள்ளிட்ட பல உலக நாட்டின் மக்கள், விளையாட்டின் மூலம் பணம் சம்பாதிக்கலாம் என்று தொடர்ந்து, Axie Infinity-க்கு அடிமையாகி வருகின்றனர். இதுபோன்ற நடைமுறைகள் அனைத்தையும், கட்டுப்படுத்தி சரியான வழிவகை செய்யும் கடமை அரசுக்கு உள்ளது என்பதை, ஏதோ ஒரு சம்பவங்கள் நினைவுபடுத்திக்கொண்டே இருக்கின்றன.
கட்டுரைக்குள் குறிப்பிட்ட தற்கொலை சம்பவம் போன்று, எந்த ஒரு மோசமான முடியும் தீர்வாகாது. தற்கொலை எண்ணம் தோன்றினால்,
சினோகா - 044 2464 0050
ஜுவன் - 044 2656 4444
போன்ற அமைப்புகளைத் தொடர்பு கொண்டு பேசலாம். அவர்கள் உங்களுக்குச் சரியான வழிகாட்டுதல்களை வழங்கி மீண்டு வர உதவுவார்கள். எந்த ஒரு சூழலிலும், தற்கொலை தீர்வாக அமையாது. சரியான வழியில் வாழ்க்கையை முன்னெடுத்துச் செல்வது மட்டுமே தீர்வாக அமையும்.

Related Stories
சமூக வலைதளம் என்பது அரக்கனா? பாதுகாப்பாக செயல்படுவது குறித்து தெரிந்து கொள்ள வேண்டியதன் அவசியம்!
'அனிதா முதல் மோதிலால் வரை இறந்தது, யார் ஆட்சியில்?' மாணவன் தற்கொலையும், அதிமுக வெளிநடப்பும்!