"குழந்தையை எப்படித் தொட்டார் என்பது முக்கியமில்லை: அவரது பாலியல் உள்நோக்கம்தான் முக்கியம்!"
சபரிமலை, தன்பாலின ஈர்ப்பாளர்கள் போன்ற பல வழக்குகளில் உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பு மெச்சத்தக்கது.
சிறுமிகளை ஆடைக்கு மேல் தொட்டு பாலியல் தொந்தரவு செய்தால் அது போக்சோ சட்டத்தின் கீழ் வராது என்ற மும்பை உயர்நீதிமன்ற கிளையின் தீர்ப்பை ரத்து செய்து உயர்நீதிமன்ற நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.
ஏன் பலரும் உயர்நீதிமன்ற நீதிபதிகள் அளித்த தீர்ப்பை வரவேற்கின்றனர்? என்ன காரணம் அதற்கு?
கடந்த 2016ஆம் ஆண்டு மகாராஷ்டிரா மாநிலம், நாக்பூரைச் சேர்ந்த 12 வயது சிறுமி மீது அதே பகுதியைச் சேர்ந்த 35 வயதான சதீஷ் என்பவர் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டார். இதனால் அந்த சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் அடிப்படையில் சதீஷை போக்சோ சட்டத்தின் கீழ் காவல்துறையினர் கைது செய்தனர். இந்த வழக்கை விசாரித்த கீழமை நீதிமன்றம் சதீஷுக்கு போக்சோ சட்டத்தின் கீழ் மூன்று ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து உத்தரவிட்டது.
இதனை எதிர்த்து சதீஷ் மும்பை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். இந்த வழக்கை விசாரித்த மும்பை உயர்நீதிமன்றம், ‘சிறுமிகளை ஆடைக்கு மேல் தொட்டு பாலியல் தொல்லை தந்தால் அது போக்சோ சட்டதின் கீழ் வராது. ஆடைகளின்றி பாலியல் தொல்லை கொடுத்தால் மட்டுமே போக்சோ சட்டத்தின் கீழ் வரும்’ என்று தீர்ப்பளித்து ஐபிசி 354-வது பிரிவின் கீழ் ஓர் ஆண்டு கடுங்காவல் தண்டனையும், 500 ரூபாய் அபதாரமும் வழங்கி நீதிபதிகள் தீர்ப்பளித்தனர்.
இந்த தீர்ப்பு தவறான முன்னுதாரணமாக அமைந்துவிடும், நீதிமன்றத்தின் தீர்ப்பு கண்டனத்துக்குரியது என பலரும் அப்போது கருத்து தெரிவித்தனர். இந்நிலையில், தேசிய குழந்தை உரிமைகள் பாதுகாப்பு, தேசிய மகளிர் ஆணையம் ஆகியவை உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தன.

இந்த வழக்கு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.ஏ. பாப்டே மற்றும் வி, ராமசுப்ரமணியன் உள்ளிட்ட மூன்று பேர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. மத்திய அரசின் தலைமை வழக்கறிஞர் கே.கே. வேணுகோபாலின் வாதங்களைக் கேட்டறிந்த நீதிபதிகள், சிறுமிகளை ஆடைக்கு மேல் தொட்டு பாலியல் தொல்லை தந்தால் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யமுடியாது என்ற மும்பை உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை ரத்து செய்து உச்சநீதிமன்ற நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
இதுகுறித்து வழக்கறிஞர் திலகவதி பேசும்போது, “இந்த விஷயத்தில் உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பினை வரவேற்கிறேன். முன்பு மும்பை உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பு பாதிக்கப்பட்ட பெண் குழந்தைக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எந்த அளவிற்கு மன உளைச்சலை ஏற்படுத்தியிருக்கும். ஒரு பெண் நீதிபதியே பெண்ணின் உணர்வைப் புரிந்துகொள்ளாமல் இப்படி ஒரு தீர்ப்பை அளித்திருக்கிறார் என்று பலரும் கூறிவந்தனர். இதுபோல இந்தியாவில் பல நீதிபதிகள் பெண்களின் உணர்வுகளைப் புரிந்துகொள்ளாமல், நம் சமூகத்தில் ஆண் பெண் சமத்துவம் இல்லை என்பதை உணராமல் சட்டப்படி தீர்ப்பு கொடுக்கிறேன் என்கிற பெயரில் திர்ப்பளித்துவருகின்றனர். அந்த வரிசையில் இந்த தீர்ப்பும் ஒன்று.
இந்த தீர்ப்பு வெளிவந்தபோது ஆச்சரியமாகவும், அதிர்ச்சியாகவும் இருந்தது. எப்படி இப்படி ஒரு தீர்ப்பை அளிக்கமுடியும்? எனத் தேசிய உரிமைகள் குழந்தைகள் பாதுகாப்பு, தேசிய மகளிர் ஆணையம் ஆகியவை மேல்முறையீடு செய்தன. இது முழுக்க முழுக்க போக்சோ சட்டத்தின் கீழ் வரக் கூடிய குற்றம்தான். ஒருவர் ஒரு குழந்தையை எப்படித் தொட்டார் என்பது முக்கியமில்லை. அவரது பாலியல் உள்நோக்கம்தான் முக்கியம். இந்த நீதிபதி சொல்வதைப் பார்த்தால் யார் வேண்டுமானாலும் கையுறை அணிந்துகொண்டு குழந்தைகளைத் தொடலாம் என்கிற பார்வை வந்துவிடாதா?
உச்சநீதிமன்றம் பல நேரங்களில் பெண்களுக்கு ஆதரவான தீர்ப்பை அளித்துவருகிறது. அது மிகவும் மகிழ்ச்சியான விஷயம். சபரிமலை, தன்பாலின ஈர்ப்பார்கள் போன்ற பல வழக்குகளில் உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பு மெச்சத்தக்கது.
அந்தவகையில் இப்போது அளித்த தீர்ப்பையும் முக்கியமான தீர்ப்பாகப் பார்க்கிறேன். பொதுவாக ஒரு பெண் பாதிக்கப்பட்டால் எல்லா பெண்களாலும் மேல் முறையீடு செய்ய முடியாது. அதற்கான வாய்ப்புகளும் பெண்களுக்கு மிக மிகக் குறைவு. அதனால் மேல்முறையீடு என்பது எல்லோருக்கும் சாத்தியம் இல்லை. எல்லோருக்கும் இந்த மாதிரி நீதி கிடைக்குமா என்றால் கிடைக்காது. கீழமை நீதிமன்றங்களில் என்ன தீர்ப்பு வருகிறதோ அதுதான் நீதி என்று நினைத்து சில பெண்கள் வாழ்ந்துகொண்டிருக்கின்றனர்.

நீதி கொடுக்கப்படும் முறை அல்லது நீதிமன்றத்தை அணுகும் முறை என்பது எளிமையாக்கப்பட வேண்டும். காவல்துறையும், நீதிமன்றமும் பெண்கள் சம்பந்தப்பட்ட விஷயங்களில் பாலியல் சமத்துவத்தை மனதில் வைத்துக்கொண்டு தீர்ப்புகளை வழங்கவேண்டும். அதுபோல, பெண்களுக்கு நிறைய ஆணையம், இலவச சட்ட உதவி மையங்களைக் கொண்டுவரவேண்டும். இந்த மாதிரி ஆணையங்களை அமைப்பதன் மூலமாகப் பெண்கள், குழந்தைகள் மீது நடக்கும் வன்முறைகளைத் தடுக்கமுடியும். பெண்களுக்காக நிறைய விஷயங்களை எளிமைப் படுத்தவேண்டிய கட்டாயத்தில் நாம் இருக்கின்றோம். அதுபோல பெண்களுக்கும் குழந்தைகளுக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்தவேண்டிய இடத்தில் அரசு இருக்கிறது. நீதித்துறையும் அதற்கு உறுதுணையாக இருக்கவேண்டும்” என்று தெரிவித்தார்.
இந்த கட்டுரையை நான் எழுதிக்கொண்டிருக்கும்போதே ‘கரூரில் பாலியல் தொல்லையால் பள்ளி மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்’ என்ற செய்தி கண்ணில் பட்டது. கோவையில் 17 வயது பெண் குழந்தை கடந்த வாரத்தின் தொடக்கத்தில் இதே மாதிரியான பிரச்னையால் தற்கொலை செய்துகொண்ட விஷயத்தின் வடு இன்னும் மறையாமல் இருக்கும் அதே நேரத்தில் கரூர் மாணவி தற்கொலை செய்துகொண்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
கரூர் மாணவி தற்கொலை செய்துகொள்வதற்கு முன்பு எழுதிய கடித்தில், ” பாலியல் தொல்லையால் சாகுற கடைசி பொண்ணு நான் ஆக தான் இருக்கனும். என்ன யார் இந்த முடிவ எடுக்க வச்சான்னு சொல்ல பயமா இருக்கு. இந்த பூமியில வாழனும்னு ஆசைபட்டேன். ஆனா இப்போ பாதியிலேயே போறேன். இன்னோரு தடவ இந்த உலகத்துல வாழ வாய்ப்பு கெடச்சா நல்லா இருக்கும். பெருசாகி நிறைய பேத்துக்கு உதவி பண்ணனும்னு ஆச. ஆனா முடியாதில்ல.

I love you Amma
Chithappa, Mani mama, Ammu உங்கள எல்லாரையும் எனக்கு ரொம்ப புடிக்கும். ஆனா நான் உங்க கிட்டலாம் சொல்லாம போறேன். மன்னிச்சிருங்க.
இனி எந்த ஒரு பெண்ணும் என்ன மாதிரி சாகக் கூடாது” என்று எழுதியிருந்தார்.
இது குறித்து அத்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி, “கரூர் மாணவி பாலியல் தொல்லை காரணமாகத் தற்கொலை செய்துகொண்டது அதிர்ச்சியளிக்கிறது. கரூர் காவல்துறை கண்காணிப்பாளர் அவர்களிடம் பேசினேன். 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டு குற்றவாளியைத் தேடி வருகின்றனர். விரைவில் குற்றவாளியைக் கண்டுபிடித்துவிடுவோம் என்று உறுதியளித்துள்ளார்.
நமது குழந்தைகள் தங்கள் மீது நிகழ்த்தப்படும் பாலியல் கொடுமைகளை எதிர்க்கவும், அச்சமின்றி குற்றவாளிகளைப் பொதுவெளியில் அடையாளம் காட்டவும் முடியாமல் தற்கொலையை நாடுவது வேதனை அளிக்கிறது. ஒரு சமூகமாகவும், சட்டப்படியும் நாம் நம் குழந்தைகளுக்குப் பாதுகாப்பான சூழலை உருவாக்கவில்லை என்பது கசப்பான உண்மை.
குற்றவாளிகள் தலைநிமிர்ந்து நடக்கும் சமூகத்தில் பாதிக்கப்பட்ட பெண்கள் அச்சப்பட்டு தற்கொலை செய்துகொள்வது தொடர்ந்து நடைபெறுகிறது. ஒரு குழந்தை தற்கொலையைத் தேர்ந்தெடுக்கிறது என்றால் வாழ்வு எப்படி அதற்குத் தாங்க முடியாமல், வலி நிறைந்ததாக இருந்திருக்கும் என்று நினைக்கும்போதே நெஞ்சு பதறுகிறது.
குற்றவாளிகள் உடனடியாக சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டு கடுமையாகத் தண்டிக்கப்படவேண்டும். அத்துடன் ஒரு சமூகமாக நமக்குள்ள பொறுப்பை நாம் உதறித்தள்ளிவிட முடியாது. இம்மாதிரியான பாலியல் குற்றங்களின் ஆணிவேரை அறுத்தெறியத் தொடர்ந்து பணியாற்ற வேண்டும்.
தந்தையாகவும் இருந்து வளர்த்தெடுத்த அந்த தாய்க்கு, இந்த மகத்தான இழப்பை ஈடுசெய்யும் ஆறுதல் வார்த்தைகளை யாராலும் சொல்ல முடியாது. அந்த தாய்க்கு என் அன்பும், அரவணைப்பும்” என்று தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
இதுபோன்ற சம்பவங்கள் தமிழகம் மட்டும் அல்லாது பல மாநிலங்களில் தொடர்ந்து நடந்துவருகிறது. வழக்கறிஞர் திலகவதி சொன்னதுபோலவே பெண்களுக்கான பாதுகாப்பை இந்த சமூகம்தான் உருவாக்கவேண்டும், உறுதிசெய்யவேண்டும். அதற்கு காவல்துறையும் நீதிதுறையும் துணை நிற்கவேண்டும்.
இந்தியாவில் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் அதிகரித்துக்கொண்டே வருவதால், அமெரிக்கப் பெண் சுற்றுலாப் பயணிகள் தனியாக இந்தியாவுக்கு பயணம் மேற்கொள்ள வேண்டாம் என டெல்லியில் உள்ள அமெரிக்கத் தூதரகம் அறிக்கை வெளியிட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories
லாஸ்லியாவின் தந்தை காலமானார்!
குழந்தை பாக்கியம் பெற, சிறுமியைக் கொன்று நுரையீரலை எடுத்த கும்பல்!
அதிகரிக்கும் பாலியல் வன்கொடுமைகள்! கடும் சட்டங்கள் நிறைவேற்றும் நாடுகளுக்கிடையே இந்தியாவின் நிலை?
மாதவிடாய் காலத்தில் அறையில் அடைத்து வைக்கும் தமிழக கிராமங்கள்! ஊடகமும் குழந்தைகள் உரிமையும் - கருத்தரங்கம்