“40 வருஷமா கரண்ட் இல்லாம வாழ்ந்துட்டு இருக்கோம்!”- மணியம்மாள் சேச்சி!
EB காரர்கள் இங்க வந்து பார்த்துட்டு நீங்க இங்க தங்கியிருக்கிறதுக்கு என்ன அத்தாச்சி வச்சிருக்கீங்கனு கேக்குறாங்க. அவங்க கொடுத்தா தானே நமக்கு அத்தாச்சி இருக்கும். அவங்க கொடுக்கலனா நமக்கு எப்படி அத்தாச்சி வரும்.
கடந்த 40 வருடங்களுக்கு முன்பு சாதி மறுப்பு திருமணம் செய்துகொண்டு மணியம்மா சேச்சியும், அவரது கணவர் சிவன் பிள்ளையும் கேரளாவிலிருந்து சென்னை வந்தவர்கள். சென்னை நீலாங்கரையில் தஞ்சம் அடைந்த அவர்கள் அங்கு ஒரு டீ கடை நடத்தி அதே பகுதியில் வாழ்ந்துவருகின்றனர். சிவன் பிள்ளைக்கு சில ஆண்டுகளுக்கு முன்பு பக்கவாதம் ஏற்பட்டு உடலின் ஒரு பக்கம் செயலிழந்துள்ளது. தற்போது சுமார் 70 வயது இருக்கும் மணியம்மாள்தான் அவரது கணவரான சிவன் பிள்ளையைக் கவனித்து வருகிறார்.
இப்படி ஒரு சூழலில் வாழ்ந்துவரும் அந்த தம்பதியினரின் வீட்டில், அடிப்படை தேவையாக மாறிபோன மின்சார வசதிக்கூட இன்னும் செய்துக்கொடுக்கப்படவில்லை. சென்னைக்கு வந்து 40 வருடங்கள் ஆகியும் அவர்களுக்கு மின்னினைப்பு கிடைக்கவில்லை. இன்னும் இருள் அடைந்த குடிசை ஒன்றில்தான் வாழ்ந்துவருகின்றனர் அந்த வயதான தம்பதி. ‘நாங்கலாம் கரண்ட்டே இல்லாமை வாழ்ந்தோம்’ என்று நம் தாத்தா-பாட்டி சொல்வதைக் கேட்டிருப்போம். ஆனால் இந்த டிஜிட்டல் இந்தியாவில் ஒரு மணி நேரம் கரண்ட் இல்லை என்றாலே நாம் எவ்வளவு கஷ்டப்படுவோம் என்று நமக்குத் தெரியும். 40 வருடங்களாக கரண்ட் இல்லாமல் வாழ்ந்துவருகிறீர்களே உங்களுக்குக் கஷ்டமா இல்லையா என்று நான் கேட்டபோதுதான் மணியம்மாள் என்னிடம் பேச தொடங்கினார்.

“எங்களுக்குச் சொந்த வீடு இல்லை. சின்னதா ஒரு பெட்டி கடைய ரோட்டோரமா வச்சிருக்கேன். எங்களோட இந்த வீட்டுல கரண்ட் இல்ல. உடம்பு சரியில்லாம இருக்கும் என கணவர வச்சி அவஸ்தபடுறேன். கணவரோட மாற்றுத்திறனாளி சான்றிதழை வைச்சி பல வருஷமா அலைஞ்சிட்டு இருக்கேன் இந்த கரண்ட்டுகாக. ஆனா இதுவரைக்கும் எங்களுக்கு கரண்ட் கிடைக்கவே இல்ல.
ரொம்ப மன கஷடத்துல நாங்க வாழ்ந்துட்டு இருக்கோம். EB காரர்கள் இங்க வந்து பார்த்துட்டு நீங்க இங்க தங்கியிருக்கிறதுக்கு என்ன அத்தாச்சி வச்சிருக்கீங்கனு கேக்குறாங்க. அவங்க கொடுத்தா தானே நமக்கு அத்தாச்சி இருக்கும். அவங்க கொடுக்கலனா நமக்கு எப்படி அத்தாச்சி வரும். கோவில், தெருனு பல இடங்களுக்கு இந்த கவர்ண்ட்மெண்ட் கரண்ட் கொடுக்குது. மனிதனோட வாழ்க்கைக்குத் தேவையான இந்த கரண்ட்ட எங்களுக்கு கொடுக்கல. நான் கேள்வி எல்லாம் நல்லா கேட்பேன். மகளிர் அமைப்பிலிருந்தேன். எனக்கு எல்லாமே தெரியும். ஆனா நம்ம கேள்வி கேட்டா அதுக்கு புரோஜனம் இல்ல.
என்னுடைய கடையில் வியாபாரமும் சுத்தமா இல்ல. இந்திகாரர்கள் முன்னாடிலாம் நிறைய வருவாங்க. அப்போ வியபாரம் இருந்தது. இப்போ இந்தி காரர்கள் இல்லை. எனக்கும் அடிக்கடி உடம்பு சரியில்லாம போறதனால எனக்கு கடையை திறக்குறதுல சிக்கல் இருக்கு. கடையில அந்த மூலக் கூட ஒடஞ்சிருக்கு. ஆதார் அட்டை, ஓட்டர் ஐடி, ரேஷன் கார்டுனு எல்லாமே இங்கதான் இருக்கு. கேரளாவில் ஒன்னும் இல்லை. சின்னதா கரண்ட்வோட எனக்கு ஒரு வீடு கொடுத்தா போதும். அதுலையே டீ கடைய வச்சிக்குவேன். நாங்க இப்ப இருக்கிறது கார்ப்பரேஷன் இடம். வேறு எங்காவாது கவர்ண்ட்மெண்ட் ஒரு வீடு கொடுத்தா நல்லா இருக்கும்” என்றார்.

கேரளாவிலிருந்து சென்னைக்கு ஏன் வந்திங்கனு கேட்டபோது, கொஞ்சம் யோசித்த மணியம்மாள் சேச்சி, “நான் என் ஹிஸ்டிரிய யாருக்கிட்டவும் சொல்லமாட்டேன். இப்போ உங்க கிட்ட சொல்றேன். என் கணவரோட அப்பா குடும்ப கட்டுப்பாட்டு சுகாதாரத்துறை அதிகாரி. இவங்க குடும்பத்துல உள்ள எல்லாரும் டிஎஸ்பி, எஸ்.பி, அட்வோகேட்னு எல்லாரும் பெரிய பெரிய பொறுப்புல இருந்தாங்க. இவரோ பெரிய டீ கடையும் ஹோட்டலையும் நடத்திட்டுவந்தார். என் குடும்பம் ரொம்ப சின்ன குடும்ப. ரொம்ப கஷ்டம். என் அம்மாவுக்கு ஐந்து பெண் பிள்ளைகள். அப்போ அந்த குடும்பத்துல எவ்வளோ கஷ்டம் இருக்குனு யோசிச்சி பாருங்க. சின்ன வயசிலையே எங்க அப்பா இறந்துட்டாரு. அந்த கஷ்டத்துலையும் எங்க அம்மா எல்லாரையும் ஓரளவு படிக்க வச்சாங்க. நான் தான் மூத்த பொண்ணு. எங்க ஊருல கல்யாணம் பன்ன நிறைய பணம் வேணும். அந்த சமயத்துல இவரு மனசு வச்சி என்ன கல்யாணம் பன்னிகிட்டார். நாங்க ஜாதியும் வேற சாதிங்குறதுனால இவரோட வீட்டுல அப்பவே என்ன துப்பாக்கி வச்சி கொலை பண்ண பாத்தாங்க. அதான் நாங்க ஊரவிட்டுட்டு இங்க வந்துட்டோம். ஆனா இங்கையும் எங்களுக்கான வசதி இன்னும் கிடைக்கல” என்று கூறினார்.
