”சமூக நீதி பேசும் படத்திற்கு குரல் கொடுக்கவேண்டும்!”: ஜெய் பீம்!
வேறு சில காரணங்களுக்காக ஒரு படத்திற்கு பிரச்னை வந்தால் அது அவர்களின் தனிப்பட்ட பிரச்னை. ஆனால் சமூக நீதிக்காகவும், சமூக மாற்றத்திற்காகவும் குரல் கொடுக்கும்போது திரைத்துறையினர் ஆதரவு அளிக்கவேண்டும்.
கடந்த நவம்பர் 2ஆம் தேதி அமேசான் பிரைமில் ஞானவேல் இயக்கத்தில் ’ஜெய் பீம்’ திரைப்படம் வெளியானது. நடிகர் சூர்யா கதாநாயகனாக நடித்திருக்கும் இந்தப் படத்தை சூர்யாவின் 2டி நிறுவனம் தயாரித்தது. 1994 ஆம் ஆண்டு கடலூரில் நடைபெற்ற ஓர் உண்மைச் சம்பவத்தை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்ட இந்தப் படம் மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வந்த நிலையில், படத்தின் எதிர்மறை கதாபாத்திரத்திற்கு வன்னியர் சங்கத் தலைவர் காடுவெட்டி குருவின் பெயரை சுட்டிக்காட்டும் விதமாகக் குருமூர்த்தி என பெயரிடப்பட்டிருப்பதாகவும், எதிர்மறை கதாபாத்திரத்தின் வீட்டில் வன்னியர் சமூகத்தை குறிக்கும் அக்னி கலசத்துடன் காலண்டர் வைக்கப்பட்டிருப்பதாகவும் பாமக, பாஜக மற்றும் வன்னியர் சங்கங்கள் குற்றம் சாட்டின.

இந்த நிலையில், நாடாளுமன்ற உறுப்பினரும், பாமக இளைஞரணி தலைவருமான அன்புமணி ராமதாஸ் நடிகர் சூர்யாவுக்குத் தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் கடிதம் ஒன்றை எழுதியிருந்தார். அதில், “தங்களின் தயாரிப்பில், தங்களைக் கதாநாயகனாகக் கொண்டு இயக்குனர் த.செ.ஞானவேல் இயக்கத்தில் உருவாகி வெளிவந்துள்ள ‘ஜெய்பீம்’ என்ற தலைப்பிலான திரைப்படம் தமிழ்நாட்டின் பெரும்பான்மை சமுதாயமான வன்னியர்கள் மத்தியில் வேதனையையும், கொந்தளிப்பையும் ஏற்படுத்தியிருப்பதாகச் செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. ‘ஜெய்பீம்’ திரைப்படத்தில் வன்னியர் சமுதாயம் எந்த அளவுக்குத் திட்டமிட்டு இழிவுபடுத்தப்பட்டிருக்கிறது என்பது குறித்து ஆயிரக்கணக்கான மக்களும், இளைஞர்களும் என்னிடம் தெரிவித்து வருகின்றனர். தமிழ்நாடு முழுவதும் கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக இதே உணர்வும், மன நிலையும் மேலோங்கியுள்ள நிலையில், தங்களிடமிருந்து அறமற்ற அமைதி மட்டுமே வெளிவந்து கொண்டிருப்பதால் தான் தங்களுக்கு இக்கடிதத்தை நான் எழுத வேண்டியிருக்கிறது.
அடக்குமுறை யார் மீது கட்டவிழ்க்கப்பட்டாலும், அவை எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று. அதற்கு எதிராக நாம் அனைவரும் ஒன்று சேர்ந்து போராட வேண்டும்.
‘ஜெய்பீம்’ திரைப்படத்தில் கொடூர மனநிலையும், மனித உரிமையைக் காலில் போட்டு மிதிக்கும் போக்கும் கொண்ட காவல்துறை சார்பு ஆய்வாளரின் வீட்டில், உண்மையிலேயே அவர் வன்னியர் சமூகத்தைச் சேர்ந்தவர் இல்லை என்றாலும் கூட, அவரை வன்னியர் என்று காட்டும் வன்மத்துடன் அக்னிக் கலசத்துடன் கூடிய வன்னியர் சங்க நாட்காட்டி இடம்பெற்று இருப்பது, உண்மையான நிகழ்வில் ராஜாக்கண்ணு என்ற பழங்குடியினரைக் கொலை செய்த காவல் சார்பு ஆய்வாளரின் பெயர் அந்தோணிசாமி என்பது பலரும் அறிந்த உண்மை எனும் நிலையில், அந்த பாத்திரத்திற்குக் குருமூர்த்தி என்று பெயர் சூட்டி, வன்னியர் சங்கத்தின் மறைந்த தலைவர் ஜெ.குரு அவர்களை நினைவுபடுத்தும் வகையில் குரு என்று அழைப்பது ஆகியவையும், இந்த அநீதிகளுக்கு வலு சேர்க்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ள சில காட்சிகளும் தான் தமிழ்நாட்டில் வாழும் மக்களைக் கொந்தளிக்கச் செய்துள்ளன. இந்தக் காட்சிகள் கண்டிக்கத்தக்கவை” என்று எழுதியிருந்தார்.
இதற்குப் பதில் கடிதம் எழுதியிருந்த நடிகர் சூர்யா, “மதிப்புக்குரிய மாநிலங்களவை உறுப்பினர் திரு. அன்புமணி ராமதாஸ் அவர்களுக்கு, நீதி நாயகம் சந்துரு அவர்கள் வழக்கறிஞராக இருந்தபோது நடத்திய ஒரு வழக்கில், அதிகாரத்தை எதிர்த்து சட்டப் போராட்டம் மூலம் நீதி எவ்வாறு நிலைநாட்டப்பட்டது என்பதே ஜெய்பீம் படத்தின் மையக்கரு. பழங்குடியின மக்கள் நடைமுறையில் சந்திக்கும் பல்வேறு பிரச்னைகளையும் படத்தில் பேச முயற்சித்திருக்கிறோம்.
கடிதத்தில் நீங்கள் குறிப்பிட்டுள்ளதைப் போல எந்தவொரு குறிப்பிட்ட தனிநபரையோ, சமுதாயத்தையோ அவமதிக்கும் நோக்கம் ஒருபோதும் எனக்கோ, படக்குழுவினருக்கோ இல்லை. சிலர் சுட்டிக்காட்டிய பிழையும், உடனடியாகத் திருத்தி சரி செய்யப்பட்டதைத் தாங்கள் அறிவீர்கள் என நினைக்கிறேன்.
படைப்பு சுதந்திரம் என்ற பெயரில் எந்தவொரு சமூதாயத்தையும் இழிவுபடுத்தும் உரிமை இங்கு எவருக்கும் வழங்கப்படவில்லை என்கிற தங்களின் கருத்தை முழுவதுமாய் நான் ஏற்கிறேன். அதேபோல, ‘படைப்பு சுதந்திரத்திற்கு அச்சுறுத்தல் வராமல் காக்கப்படவேண்டும்’ என்பதை நீங்களும் ஏற்பீர்கள் என்று நம்புகிறேன்.
ஒரு திரைப்படம் என்பது ஆவணப்படம் அல்ல. இத்திரைப்படத்தின் கதை உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு புனையப்பட்டுள்ளது. இதில் வரும் கதாபாத்திரங்கள், பெயர்கள், சம்பவங்கள் அனைத்தும் யாரையும் தனிப்பட்ட அளவில் குறிப்பிடவில்லை என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம்’ என்கிற அறிவிப்பை படத்தின் தொடக்கத்திலேயே பதிவு செய்திருக்கிறோம்.
எளிய மக்களின் நலன்மீது அக்கறையில்லாத யாருடைய கையில் அதிகாரம் கிடைத்தாலும் அவர்கள் ஒரே மாதிரிதான் நடந்து கொள்கிறார்கள். அதில், சாதி, மத, மொழி, இனம், பேதம் இல்லை. உலகம் முழுவதும் இதற்குச் சான்றுகள் உண்டு. படத்தின் மூலம் அதிகாரத்தை நோக்கி எழுப்பிய கேள்வியை, குறிப்பிட்ட ‘பெயர் அரசியலுக்குள்’ சுருக்கவேண்டாம் என்று அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

ஒருவரைக் குறிப்பிடுவதாக நீங்கள் சொல்லும் அந்தக் கதாபாத்திரத்தின் பெயர், வேறொருவரையும் குறிப்பதாக ஒரு பத்திரிக்கையாளர் குறிப்பிடுகிறார். எதிர்மறைக் கதாபாத்திரங்களுக்கு எந்தப் பெயர் வைத்தாலும் அதில் யாரேனும் மறைமுகமாகக் குறிப்பிடப்படுவதாகக் கருதப்படுமேயானால், அதற்கு முடிவே இல்லை. அநீதிக்கு எதிராக ஒன்றிணைய வேண்டிய போராட்டக் குரல், ‘பெயர் அரசியலால்’ மடைமாற்றும் செய்யப்பட்டு நீர்த்துப் போகிறது.
சக மனிதர்கள் வாழ்வு மேம்பட என்னால் முடிந்த பங்களிப்பைத் தொடர்ந்து செய்கிறேன். நாடு முழுவதிலும் எல்லா தரப்பு மக்களின் பேரன்பும், பேராதரவும் எனக்கு இருக்கிறது. விளம்பரத்திற்காக யாரையும் அவமதிக்க வேண்டிய எண்ணமோ, தேவையோ எனக்கு இல்லை என்பதைப் பணிவுடன் தெரிவித்துக் கொள்கிறேன். சமத்துவமும், சகோதரத்துவமும் பெருக நாம் அனைவரும் அவரவர் வழியில் தொடர்ந்து செயல்படுவோம். தங்கள் புரிதலுக்கு நன்றி” என சூர்யா பதில் கடிதம் எழுதியிருந்தார்.
இதனை தொடர்ந்து பாமகவினரும், பாஜகவினரும், வன்னியர் சங்கங்களும் சூர்யாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து சமூக வலைத்தளங்களில் அவரை விமர்சித்துவந்தனர்.
அந்தவகையில், பாமக மாவட்ட செயலாளர் சித்தமல்லி பழனிச்சாமி நடிகர் சூர்யாவை எட்டி உதைக்கும் இளைஞருக்கு ரூ. 1 லட்சம் பரிசு என அறிவித்திருந்தார். இது இன்னும் பெரிய அதிர்வலையை கிளப்பியிருந்தது. இதனையடுத்து சூர்யாவின் ரசிகர்கள் பாமகவினரின் விமர்சனத்திற்குப் பதிலளிக்கும் வகையில் கருத்து பதிவிட்டுவந்தனர். ஆனால் அதற்கு சூர்யா தடை விதித்ததாகக் கூறப்படுகிறது.
இதுகுறித்து அகில இந்திய சூர்யா ரசிகர் மன்றம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஜெய்பீம் படம் அதிகாரத்துக்கு எதிரான மக்களின் போர்க்குரலாக உலகமெங்கும் ஒலிக்கிறது. படத்திற்கு கிடைத்திருக்கும் வரவேற்பும் அங்கீகாரமும்தான் இந்த மண்ணில் மாற்றம் நிகழும் என்பதற்கான நம்பிக்கை. அதே நேரம் படத்திற்கு எதிரான கருத்துக்களை ஒரு சிலர் திட்டமிட்டுப் பரப்பி வருவதை இந்த சமூகம் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறது. அதனால் எப்போதும்போல் நாம் பொறுமையாக இருப்பதுதான் சிறப்பு. எவருக்கும் விளக்கமோ பதிலடியோ கொடுக்க வேண்டிய அவசியம் நமக்கு இல்லை.
கட்டுப்பாடும், பொறுமையும் கொண்ட நம் மன்றத்தினர் பேச்சாகவோ சமூக வலைத்தளப் பதிவுகளாகவோ எவ்வித எதிர்வினையும் ஆற்ற வேண்டாம். உங்களின் நேரத்தையும், சக்தியையும் பயனுள்ள செயல்களுக்குச் செலவிடுங்கள்” என்று குறிப்பிட்டுள்ளது.
இதற்கிடையே சூர்யாவை எட்டி உதைக்கும் இளைஞருக்கு ரூ. 1 லட்சம் பரிசு என அறிவித்திருந்த பாமக மாவட்ட செயலாளர் சித்தமல்லி பழனிச்சாமி மீது காவல்துறையினர் 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
மேலும் இயக்குனர் பாரதிராஜா அன்புமணி ராமதாஸுக்கு கடிதம் ஒன்றை எழுதியிருந்தார். அதில், “பூதக்கண்ணாடியை அணிந்துகொண்டு குற்றம் பார்க்கத் தொடங்கினால் எந்த ஒரு படைப்பும் எளியோருக்காகப் பேசாமல் முடங்கிவிடும். சினிமாவை விட இங்கு கவனம் செலுத்த நிறைய வேலைகள் இருக்கின்றன. சமூக மாற்றங்களுக்கான உங்கள் போராட்டங்களே நிறைய உள்ளன. தங்கள் தகுதிக்கு நீங்கள் இங்கு வரவேண்டாமே...
ஒரு அலைபேசியில் முடிந்திருக்க வேண்டியதும் சிறு தவறுகளைச் சுட்டிக் காட்டி தீர்க்க வேண்டியதுமான இப்பிரச்னையை எதிர்காற்றில் பற்றி எரியும் நெருப்புத் துகளாக்கியது ஏன் எனப் புரியவில்லை.
சூர்யா யாரையும் காயப்படுத்தும் தன்மை கொண்டவரல்ல. யாரையும் ஏற்ற இறக்கத்தோடு கண்காணிப்பவரல்ல. அவரை ஒரு சமூகத்திற்கு எதிரானவராக சித்தரிப்பதும், அவர் மீது வன்மத்தையும் வன்முறையையும் ஏவிவிடுவதும் மிகத் தவறான முன்னுதாரணம்” என அந்த கடிதத்தில் எழுதியிருந்தார்.
இன்னொரு முக்கியமான விஷயமாக, 2D நிறுவனம் சார்பில், நிஜ ராஜாக்கண்ணுவின் மனைவி பார்வதிக்கு ரூ.15 லட்சம் வங்கி வைப்பு நிதியாக சூர்யா வழங்கினார்.
மேலும் இந்தப் பிரச்னை தொடர்பாக திரைத்துறையை சார்ந்த பலரும் சூர்யாவுக்கு ஆதரவு தெரிவித்தனர். இயக்குனர் வெற்றிமாறன், பா. ரஞ்சித் உள்ளிட்டவர்களும் ஆதரவு தெரிவித்திருந்தனர். அந்தவகையில், நடிகர் சத்யராஜ், “ஜெய் பீம் திரைப்படத்திற்குத் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட பலர் பாராட்டு தெரிவித்துவருகின்றனர். சிலப் படங்கள் ரசிப்பதற்கும், கை தட்டுவதற்கும், விசிலடிப்பதற்குமான படமா இருக்கும். சில படங்கள் பாராட்டுதலுக்குரிய படமாக இருக்கும். மிக சிலப் படங்கள் போற்றுதலுக்குரிய படமாக இருக்கும். அதில், ஒரு முக்கிய இடத்தை ஜெய் பீம் படம் பிடித்திருக்கிறது. எதற்கும் துணிந்தவன் சூர்யா. படக் குழுவினரை நான் மனதார பாராட்டுகிறேன். சூர்யாவுக்கு ஆதரவாக திரைத்துறையினர் ஆதரவு தெரிவித்துவருகின்றனர்.

அது மகிழ்ச்சி அளிக்கிறது. தென்னிந்தியத் திரைப்பட வர்த்தக சபையிலிருந்து எங்கள் இயக்குனர் பாரதிராஜா உள்ளிட்ட பலர் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். இது மனதிற்கு நிறைவு அளிக்கிறது. வேறு சில காரணங்களுக்காக ஒரு படத்திற்கு பிரச்னை வந்தால் அது அவர்களின் தனிப்பட்ட பிரச்னை. ஆனால் சமூக நீதிக்காகவும், சமூக மாற்றத்திற்காகவும் குரல் கொடுக்கும்போது திரைத்துறையினர் ஆதரவு அளிக்கவேண்டும். அந்தவகையில் இயக்குனர் பாரதிராஜா முன்மொழிந்ததை நான் வழிமொழிகிறேன்” என தெரிவித்தார்.
இதற்கிடையே நடிகர் சந்தானம், “ திரைப்படங்களில் யாரை வேண்டுமானாலும் உயர்த்திப் பேசுங்கள். ஆனால் அடுத்தவர்களை தாழ்த்தி பேசாதீர்கள். அது தேவையற்று” எனப் பேசியிருந்தார். இது சமூக வலைத்தளங்களில் கடும் விவாதத்திற்கு வழிவகுத்தது.

“ஜெய் பீம் படத்தில் இடம் பெற்றிருக்கும் காட்சிகள் தொடர்பாக வன்னியர் சங்கத்தின் தலைவர் பு.த. அருள்மொழி தலைமையில் அவதூறு அறிக்கையை ஜெய் பீம் பட இயக்குனர் ஞானவேல், நடிகர் சூர்யா உள்ளிட்டோருக்கு அனுப்பியிருக்கிறோம். மேலும் இந்த செயலுக்குப் படக்குழு மன்னிப்பு கேட்கவேண்டும் மற்றும் 5 கோடி ரூபாய் இழப்பீடு கொடுக்கவேண்டும். வன்னியர் சமூகத்தை இழிவுபடுத்தும் விதமாக வைக்கப்பட்டுள்ள காட்சிகள் முழுமையாக நீக்கப்படவேண்டும். நாங்கள் அனுப்பியிருக்கும் நோட்டீஸுக்கு படக்குழு என்ன செய்கிறார்கள் என்பதைப் பார்த்து அடுத்த கட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளவிருக்கிறோம். மேலும் அந்த நாங்கள் கேட்டிருக்கும் 5 கோடி இழப்பீட்டுத் தொகையை முழுமையாகப் பார்வதி அம்மாளுக்கு வழங்குவோம்” என பாமக வழக்கறிஞர் பாலு செய்தியாளர்கள் சந்திப்பின்போது தெரிவித்தார்.
தற்போது சென்னை தி நகரில் உள்ள நடிகர் சூர்யாவின் வீட்டிற்குத் துப்பாக்கி ஏந்திய காவல்துறையினர் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
நேற்று சூர்யா வெளியிட்ட முகநூல் பக்கத்தில், ‘ஜெய் பீம்’ படத்திற்கு நீங்கள் அனைவரும் அளித்த அன்பு என்னை வியக்க வைக்கிறது. இதற்கு முன் இப்படி ஒரு அன்பைப் பார்த்ததில்லை. நீங்கள் அனைவரும் எங்களுக்கு அளித்த நம்பிக்கை மற்றும் உறுதிப்பாட்டிற்கு நான் எவ்வளவு நன்றியுள்ளவனாக இருக்கிறேன் என்பதை வார்த்தைகளால் வெளிப்படுத்த முடியாது. எங்களுடன் நின்றதற்கு மனமார்ந்த நன்றி” என பதிவிட்டிருந்தார்.
